cow
file pic

ராணிப்பேட்டை அருகே வனவிலங்கு வேட்டையாட மாங்கொட்டையில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு சென்ற சினை பசு மாடு படுகாயமடைந்தது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம் மோட்டூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நரசிம்மன், இவருக்கு சொந்தமான 5 மாதம் சினையாக உள்ள பசு சீக்கரஜபுரம் பெரிய ஏரியில் வெள்ளிக்கிழமை காலை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பசு மாட்டின் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் வெடிசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்துள்ளனர்.

அப்போது பசு மாட்டின் கீழ் தாடை கிழந்து தொங்கி ரத்தம் வெளியேறிபடி பசு அலறியடித்து துடித்துள்ளது.இது குறித்து உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கு தகவல் அளித்துள்ளனர். அவர் சிப்காட் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் சிப்காட் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது விசாரணையில் மர்ம நபர்கள் காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் நாட்டு வெடிகுண்டு மறைத்து வைத்திருந்ததும், அங்கு மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடு தெரியாமல் கடித்ததால் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து புளியங்கண்ணு அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு படுகாமடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நாட்டு வெடிகுண்டை மாங்கொட்டையில் மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  விடுதலைப் போரில் சனாதனத்தின் பங்களிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending