
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசுப் பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது.
பின்பு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 1-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிப்பு காரணமாக ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் அதில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் 60 சதவீதப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஆரம்பத்தில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், பாகலூர், தளி, அஞ்செட்டி, சூளகிரி உள்ளிட்ட நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கு 60 சதவீதப் பயணிகளுடன் 50 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த அரசுப் பேருந்துகளில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்களில் மட்டும் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. அதன் பிறகு இப்பகுதியில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியின்றி 100 சதவீதத்துக்கும் மேலாக பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர்.
குறிப்பாக ஓசூர் – தேன்கனிக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் ஏற்றப்படுகின்றனர்.
இதனால் அரசுப் பேருந்துகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் பயணிகள் ஒருவரை ஒருவர் உரசியபடி பயணிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஓசூர் பகுதியில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனை முன்னிட்டு அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் எந்த அனுமதியும் இல்லாமல் தங்கள் மண்டலங்களுக்குள் உள்ள மாவட்டங்களுக்குள் பயணிக்க முடிகிறது.
நெல்லையிலும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. சில பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கும் சூழலும் உள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுடன் தனிமனித இடைவெளி விட்டு அமர வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், நெல்லை மாநகரப் பேருந்துகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

பேருந்துகளில் தனிமனித இடைவெளியின்றி ஏறும் பயணிகளை நடத்துநர் இறங்குமாறு தெரிவித்தாலும் யாரும் அதைப் பொருட்படுத்துவதில்லை. அதனால் சில பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணிக்கும் அவலமும் நடக்கிறது.
பேருந்துகளில் பயணம் செய்பவர்களில் பலர் முகக் கவசம் அணிவதில்லை. அடுத்தடுத்து ஒட்டி உட்கார்ந்துகொண்டும் நின்று கொண்டும் பயணம் செய்யும் நிலையில், முகக் கவசம் அணியாமல் இருமுவது, தும்முவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சக பயணிகளை அச்சமடைய வைத்துள்ளது.
இதுபற்றி பஸ் பயணிகள் கூறுகையில், “வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் பேருந்தில் பயணம் செய்கிறோம். ஆனால், ஒரு சிலர் மிகவும் அலட்சியமாக முகக்கவசம் இல்லாமல் பயணிப்பதால் பேருந்துகளில் செல்லும் ஊருக்கு மட்டும் அல்லாமல் கொரோனா தொற்றுக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்கிறோமோ என்கிற கவலை ஏற்படுகிறது” என்கிறார்கள் வேதனையுடன்.
இதன் காரணமாக பயணிகளிடையே கொரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளதாகப் பயணிகள் கூறுகின்றனர்.