ஒரு வயது குழந்தையின் சடலம் தொட்டியில்.. தாய் தூக்கில்… தற்கொலையா?

கிரைம் நியூஸ் தமிழகம்
arupukkottai

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஒரு வயதுக் குழந்தையைக் கொன்று விட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியைச் சேர்ந்தவர் திருக்குமரன் (27). இவருக்குத் திருமணமாகி மகாலட்சுமி(23) எனும் மனைவியும், ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர். திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். மகாலட்சுமி அருப்புக்கோட்டையில் மாமனார் முருகேசனுடன் வசித்து வந்த நிலையில், மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனிடையே கணவர் திருக்குமரனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை நண்பகல் வேளையில் மகாலட்சுமி தனது மாமனாரான முருகேசனை வெளியில் அனுப்பி விட்டு வீட்டிற்குள் உட்புறமாக தாழிட்டுக் கொண்டுள்ளார்.

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய மாமனார் முருகேசன் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியே பார்த்த போது உள்ளே மகாலட்சுமி தூக்கில் தொங்குவதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி வெங்கடேசன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்ட காவல் துறையினர் மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றினர். அத்துடன் குழந்தையைத் தேடிய போது மாடியில் உள்ள பிளாஸ்டிக் நீர்த்தொட்டியினுள் பிணமாக மிதந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை கொன்று, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவரும் கொலை செய்யப்பட்டர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து இரண்டு வருடங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதால், மகாலட்சுமியின் இறப்பு குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தாய் தனது ஒரு வயதேயான பச்சிளம் குழந்தையைக் கொன்று விட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 15 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.