கொழும்பு: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேன அரசு அமைத்துள்ளது. இது இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பணிக்குழு. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் சிறிசேனாவிடம், ‘இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம் விரைவில், முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, தமிழ் மக்களின் அவசர நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தலைமையில் ‘நல்லிணக்கத்துக்கான அதிபரின் பணிக்குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை சிறிசேனா அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வெளியிட்டார். அப்போது, “இலங்கையில் சமூக, மத நல்லிணக்கத்தை உருவாக்கி சாதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தமிழ் சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பான அவசர தேவைகளை கண்டறிவதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழு, நல்லிணக்கம் தொடர்பான மக்களின் கோரிக்கைகளையும் பெற்று பரிசீலிக்கும்” என அவர் கூறினார்.
