இந்தியர் மீது தாக்குதல் : அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு

Published:

வாஷிங்டன்: அமெரிக்காவில், இந்தியரைத் தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் மேடிசன் நகர் பகுதியில் வசித்து வரும் தனது மகன், மருமகள், புதிதாக பிறந்த பேரக் குழந்தையை பார்த்து வருவதற்காக குஜராத்தை சேர்ந்த சுரேஷ் பாய் படேல் (57) சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 6-ந்தேதி அவர் அந்தப் பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் காட்சி தருவதாக போலீசில் ஒருவர் புகார் செய்தார். உடனே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். ஆங்கில மொழி தெரியாத அவர் தொடர்ந்து பதில் அளிக்க முடியாமல் திணறியபோது, எரிக் பார்க்கர் (26) என்ற போலீஸ் அதிகாரி அவரை மடக்கி கீழே பிடித்து தள்ளினார். இதில் அவர் முடமானார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தியா தலையிட்டு, அமெரிக்கா கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது அதைத் தொடர்ந்து எப்.பி.ஐ. விசாரணை நடத்தியது. அலபாமா மாகாணத்தின் கவர்னர் ராபர்ட் பென்ட்லி, இந்திய அரசிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே எரிக் பார்க்கர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பணி நீக்கம் செய்யுமாறு அரசுக்கு மேடிசன் போலீஸ் துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அரசு வக்கீல்கள் குழுவினர், எரிக் பார்க்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தனர். இது தொடர்பாக உதவி அட்டார்னி ஜெனரல் வனிதா குப்தா, அலபாமா வடக்கு மாவட்ட அட்டார்னி ஜாய்ஸ் வான்சி ஆகியோர் எரிக் பார்க்கர் மீது பதிவு செய்த குற்றச்சாட்டில்… சுரேஷ் பாய் படேலை கீழே தள்ளிவிட்டு எரிக் பார்க்கர் முடமாக்கி விட்டார். பார்க்கரின் செயல்கள், அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி, பாதிக்கப்பட்ட நபர் உரிமையை இழக்க செய்துள்ளது. போலீஸ் அதிகாரிகள், சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கும், மக்களைப் பாதுகாப்பதற்கும்தான் பதவி ஏற்கிறார்கள். தங்களது பதவிப்பிரமாணத்தின்மீது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காக்காமல், மீறி, பலப்பிரயோகம் செய்த ஒருவர் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும் – என்று கூறப்பட்டுள்ளது. எரிக் பார்க்கர், தன் மீதான குற்றசாட்டை மறுத்து விட்டார். இதையடுத்து அவர் மீது அடுத்த மாதம் 29-ஆம் தேதி முறைப்படியான நீதிமன்ற விசாரணை தொடங்கி நடைபெறும். இந்த வழக்கில் எரிக் பார்க்கர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அமெரிக்க மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img