
தனக்கு மூளை அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே செல்ஃபி எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளார் ஒருவர்.
இங்கிலாந்தில் வசித்து வருபவர் ஜிம் மர்ஃபி. 54 வயதான இவருக்கு மிகவும் அரிய glioblastoma multiforme என்னும் மூளைக் கட்டி நோய் ஏற்பட்டுள்ளது. அதனை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனை அடுத்து, அவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஹல் ராயல் இன்ஃபிர்மரி என்னும் மருத்துவமனையில் ஜிம் அனுமதிக்கப்பட்டார். சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று ஜிம்மிடம் மருத்துவர்கள் தெரிவித்தபோது மூளைப் பகுதிக்கு மட்டும் மயக்கமருந்து கொடுத்து தான் விழித்தே இருக்கும்படி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் ஜிம் வலியுறுத்தியுள்ளார்.
அவரது விருப்பத்திற்கு ஏற்றவகையில் மூளைப் பகுதியில் மட்டும் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர் மருத்துவர்கள். அப்போது ஜிம் தன் செல்போனில் செல்ஃபி எடுத்து அதனை தன் குடும்பத்தினரின் வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பியுள்ளார்.

முதலில் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ஜிம் செல்ஃபி எடுத்து அனுப்பியதை நம்பாத அவர்கள் சிறிது நேரம் கழித்து நம்பியுள்ளனர். 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துமுடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜிம் தெரிவிக்கையில்,”அறுவை சிகிச்சை நடைபெறும்போது என் மனம் தைரியமாக இருக்கவேண்டும் என்பதாலேயே அவ்வாறு செய்தேன். அவர்கள் என் மூளையில் உள்ள கட்டிகளை அகற்ரிக்கொண்டிருக்கும்போது நான் பாடல் கேட்டேன்; செல்போன் பயன்படுத்தினேன்; நண்பர்களுடன் சாட் செய்தேன்” என்று கூறினார்.
அறுவை சிகிச்சையின்போது ஜிம் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.