பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தால் … கனடாவுடனான உறவு பாதிக்கும்: எச்சரித்த தில்லி!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
justin-trudeo
justin-trudeo

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டால், கனடா நாட்டுடனான உறவுகள் பாதிக்கப் படக் கூடும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி எல்லையில் விவசாயிகள் `தில்லி சலோ’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

இதனிடையே, அரசியல் ரீதியாக இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள், வருவாய் ரீதியாக சில மாநிலங்கள், தனிப்பட்ட லாப நோக்கில் சில தலைவர்கள், தேச விரோத செயல்கள் அடிப்படையில் குழப்பத்தை உருவாக்க பிரிவினைவாத அமைப்புகள் என விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்துக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணை நிற்கும்! போராட்டச் சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்தது. மேலும், ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து,இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றும் கூறி மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இது குறித்து விளக்கம் கேட்டு கனடா நாட்டு தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கனடா தூதருக்கு வெளியுறவுத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் நேரில் இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கனடா நாட்டு பிரதமர், பார்லிமெண்ட் உறுப்பினர்கள் சிலர் பேசிவரும் கருத்துகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனடா தூதரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால் அது இருநாட்டு உறவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.