தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே “இனப்படுகொலை” தீர்மானம்: விக்னேஸ்வரன்

உலகம்

wigneswaran-maithripala தமிழ் மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழக் கிழமை அன்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மற்றும் தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் சுதந்திர தின விழாவில் ஆற்றிய உரையின் கருத்தை தமிழ் மக்கள் வரவேற்றிருப்பதாகவும், அத்தகைய உறவு விரைந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அதேநேரம், அதிபரின் 100 நாள் வேலைத்திட்டத்தில், தமிழ் மக்களால் பார்க்கக் கூடிய வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து, இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணியை விடுவித்து, இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி தம்மிடம் உறுதியளித்திருப்பதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.