அடகு வைத்த நகை ஒன்றரைக் கோடி மாயம்; வங்கி ஊழியர்கள் 7 பேர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

thiruvannamalai bribe case - 2026திருவண்ணாமலையில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் கடந்த ஜூன் மாதத்தில் பொதுமக்கள் அடகு வைத்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை மாயமான விவகாரத்தில் அந்த வங்கியின் மேலாளர்கள், ஊழியர்கள் நகை மதிப்பீட்டாளர் என 7 பேர் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எதிரில் உள்ள சந்நிதி தெருவில் இயங்கி வரும் கரூர் வைஸ்யா வங்கியில் நகைக் கடன், விவசாயக் கடன் உட்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் மாதத்துக்கு 2 முறை வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை சரி பார்ப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் வங்கியில் உள்ள தங்க நகைகளை சரிபார்க்கும் போது வாடிக்கையாளர்கள் வைத்த தங்க நகைகள் அடங்கிய 40 பாக்கெட்கள் கணக்கில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன நகைகளின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய். இதை அடுத்து விழுப்புரம் கோட்ட முதன்மை மேலாளர் முரளி கடந்த ஜூன் 4 அன்று, காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாவட்ட குற்றவியல் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வங்கியின் முதுநிலை மேலாளர் சுரேஷ், நகை கடன் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையின் பொறுப்பாளர் சாந்தன அரி விக்னேஷ், லாவண்யா, தேன்மொழி, இசைவாணி, கார்த்திகேயன், மணிகண்டன் என 7 பேரைப் கைது செய்தனர்.

கைதான வங்கிப் பணியாளர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையின் போது, அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதை அடுத்து அவர்கள் 7 பேரும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் பிரபு முன் ஆஜர்படுத்தப் பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.