தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த சென்னை மாணவன் ரயில் மோதி பலி

Published:

சென்னை:
சென்னை வண்டலூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தின் அருகே நின்று செல்போனில் செல்ஃபி எடுத்த பள்ளி மாணவர் மின்சார ரயில் மோதி உயிரிழந்தார்.

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த தினேஷ். தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த அவர், ஞாயிற்றுக் கிழமை நேற்று, தனது நண்பருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டு மாலையில் வீடு திரும்ப வண்டலூர் ரயில் நிலையம் வந்தார் தினேஷ். நண்பர்கள் இருவரும் தண்டவாளம் அருகே நடந்து வந்தனர்.

அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டை நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளம் அருகே சென்ற மாணவர் தினேஷ்க்கு தனக்குப் பின்புறம் ரயில் தன்னைக் கடந்து செல்லும் காட்சியை செல்போனில் ‘செல்ஃபி’யாகப் படம் பிடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது

இதனால், தினேஷ் அவசர அவசரமாக தண்டவாளம் அருகே நின்று ‘செல்ஃபி’ எடுக்க முயன்றார். ஆனால், அந்நேரம் ரயில் அதிவேகமாக வந்தது. அது மாணவர் தலையில் பயங்கரமாக மோதியதில் உடல் சிதறி மாணவர் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அவரது நண்பன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இதுகுறித்து மின்சார ரயிலில் வந்த பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சிதறிய மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த மாணவரின் பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

மருத்துவமனைக்கு வந்த மாணவரின் தாய், தன் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அது அங்கிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

ஏற்கெனவே இதுபோல் மும்பையில் கடற்பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் அலையில் சிக்கி இழுத்துச் சென்றார். அவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் அலையில் சிக்கி பலியானார். இதனால், செல்ஃபி எடுப்பதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது குறித்த விழிப்பு உணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Related articles

Recent articles

spot_img