பாஜகவுடன் உறவு முறிந்தது?! மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவசேனா எம்.பி.,!

இந்தியா சற்றுமுன்
shivsena mp arvind sawant - 2026

சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா..

மகாராஷ்டிராவில் பாஜக., சிவசேனாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மனவேறுபாடுகள், இப்போது உச்சத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதில்லை என பாஜக., முடிவு எடுத்த நிலையில், சிவசேனாவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவந்த். சிவசேனா பக்கம் உண்மை இருக்கிறது. பொய்யான சூழலில் நான் ஏன் தில்லியில் இருக்க வேண்டும்!? எனவேதான் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இதன் மூலம், சிவசேனா, தேசிய ஜனநாயகக் கூட்டணியை முறித்துக் கொள்ள தயாராகிவிட்டதாகவே கூறப் படுகிறது. மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, முதல்வர் பதவி நாற்காலியைக் குறிவைத்து அரசியல் செய்து, இப்போது அவப்பெயர் சுமந்திருக்கிறது சிவசேனா. குறிப்பாக, தனது மகன் தேர்தலில் வென்றதும், முதல்வர் பதவியைக் குறிவைத்து சிவசேனா தலைவர் இயங்கியுள்ளது சர்ச்சையாகப் பார்க்கப் படுகிறது.

uddhav thackeray - 2026

முன்னதாக, ஆட்சி அமைக்க முன்வரப் போவதில்லை என்று பாஜக அறிவித்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இரண்டாவது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில், சிவசேனா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆதரவு தேவைப்படுகிறது.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை நேரில் சந்திப்பார் என்று தெரிகிறது. முதல்வர் பதவி சிவசேனாவுக்கும், துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும் என்ற அடிப்படையில், கூட்டணி ஒப்பந்தம் இருக்கும் என்ற கூறப்பட்டு வருகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேறினால் மட்டுமே கூட்டணி என தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்திருந்தது. இதைத் தொடர்ந்து, சிவசேனா தங்களது நிபந்தனையை நிறைவேற்றியதால், தேசியவாத காங்கிரஸ் தனது எம்.எல்.ஏக்களை இன்று ஆலோசனை மேற்கொள்ள அழைத்துள்ளது.

இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் கூறிய போது, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆதரவு வேண்டுமெனில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்க வேண்டும், மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

சிவசேனாவின் அதிகார்ப்பூர்வ நாளேடான சாம்னாவில், கடந்த வாரம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 44 எம்எல்ஏக்கள் மற்றும் சில சுயேட்சை எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ஆதரவுடன் சிவசேனாவுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், சிவசேனா அதன் முதல்வரை முன்நிறுத்த முடியும் என்று தெரிவித்திருந்தது.

எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு இன்று கூடி சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.