pamban bridge lights - 2026

வண்ணத்தில் மின்னும் பாம்பன் பாலம்! நாளை திறப்பு!

அரசியல் சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் மதுரை
pamban bridge lights - 2026
திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பாம்பன் பாலம், மின்னொளியில் ஜொலிக்கிறது

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா நாளை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ள நிலையில் புதிய பாம்பன் பாலம் வண்ண மின் அலங்காரம் செய்யப்பட்டு இரவு கடல் அலைகளோடு ஜொலிப்பதை காண கண் கோடி வேண்டும்.

இந்த நிலையில் நாளை மண்டபம் வந்து புதிய பாலத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி நாளை மண்டபம் வருகிறார். இதையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாம்பன் பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணிக்கு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, பகல் 11.45 மணியளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வருகிறார்.

பின்னர், கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்துக்கு வந்து பகல் 12 மணி அளவில் பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைப்பதுடன், புதிய `பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அங்கிருந்து பிற்பகல் 12.30 மணியளவில் புறப்பட்டு ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசுகிறார்.

அப்போது, வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் எம்.பி.க்கள் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 2.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார்.மதுரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

மேலும், பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.

பிரதமர் வருகை தரும் பாம்பன் பாலம், ராமேசுவரம் கோயில் வளாகம் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனையிட்டு வரும் போலீஸார், சந்தேக நபர்கள் தங்கியுள்ளனரா என்று விசாரித்து வருகின்றனர். முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.