சர்வர் கோளாறாம்..! தமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளம்… சிக்கல்!?

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
Chief Secretariat - 2026

சர்வர் கோளாறு எதிரொலி – தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல்… ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இம் மாதம் முதல் கட்டாயம் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் சம்பள பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அந்தந்த துறை மூலம் சம்பளப் பட்டியல் பெறப்பட்டு, மாவட்ட கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இது தற்போது முற்றிலும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கென ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ் நடைமுறை வரும் ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, சேலம், ஈரோடு, நெல்லை உள்பட சில மாவட்டங்களில் நடப்பு மாதம் முதலே, ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் மட்டுமே சம்பள பட்டியல் அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. பல இடங்களில் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால், பட்டியல் அனுப்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அலுவலர்கள் கூறிபோது… தற்போது, அளிக்கப் பட்டுள்ள சாப்ட்வேரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்களை பதிவு செய்தால், சர்வர் தாமதமாவதுடன் ஏற்றுக்கொள்ளாமல் டெலிட் ஆகிறது. பல துறையில் உள்ள அலுவலர்களுக்கு ஐஎப்எச்ஆர்எம்எஸ் பதிவேற்றம் குறித்து எந்தவித பயிற்சியும் முழுமையாக அளிக்கப்படவில்லை. 

மாவட்ட கருவூலத்தில் நேரில் சென்று கேட்டால், அங்குள்ள விப்ரோ பணியாளர்கள், இதை இங்கு சரிசெய்ய முடியாது என்று சர்வ சாதாரணமாகக் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும் போது சம்பளப் பட்டியல் ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம் போட்டவர்களுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 25ஆம் தேதிக்குள் சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு விடும். சர்வர் பிரச்னையால், நடப்பு மாதத்திற்கு இதுவரை பட்டியல் முழுமையாக தயாராகவில்லை.

எனவே, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உரிய நாளில் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது… என்று வருத்தத்துடன் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.