பாஜக.,வில் சேரும் திட்டமெல்லாம் இல்ல… ஜி.கே.வாசன் திட்டவட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
GK VASAN - 2026

எனக்கு பாஜக.,வில் சேரும் திட்டம் எல்லாம் இல்லை; மாநிலங்களவை எம்பி., பதவியைப் பெற பாஜக உதவி செய்ததாகக் கூறப்படுவதில் உண்மை எதுவுமில்லை என்று கூறினார் ஜி.கே.வாசன்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமாகா., தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக கூட்டணியில் கடந்த ஆண்டு தமாகா கடைசியாகத் தான் சேர்ந்தது. எனவே எங்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கியிருந்தனர். ஆனாலும், நாங்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்காக மாநிலம் முழுவதும் சென்று பிரசாரம் செய்தோம்.

இந்நிலையில் மாநிலங்களவையில் தமாகா.,வுக்கு ஓர் இடம் தர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறி வந்தோம். தேர்தல் தேதி அறிவித்ததும், மீண்டும் நாங்கள் அதிமுக.,விடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம் ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அதிமுக., மாநிலங்களவை எம்.பி. இடத்தை ஒதுக்கியுள்ளது. இதற்காக மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மாநிலங்களவை எம்.பி. பதவியை பெறுவதற்கு தில்லியில் உள்ள பாஜக தலைவர்கள் உதவி செய்ததாக சிலர் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. பாஜக., தயவால் நான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டேன் என்பது சரியல்ல. சிலர் நான் பாஜக.,வில் சேர்ந்து விடுவேன் என்று வதந்தியை பரப்புகிறார்கள். அவர்களது பகல் கனவு பலிக்காது.

தேமுதிக மாநிலங்களவைக்கு இடம் கேட்டது குறித்து உண்மையிலேயே எனக்கு எதுவும் தெரியாது. அவர்கள் அதிமுக.,வுடன் எத்தகைய ஒப்பந்தங்கள் செய்திருந்தனர் என்பதும் எனக்கு தெரியாது. மாநிலங்களவையில் ஏற்கெனவே நான் எம்.பி.யாக இருந்திருக்கிறேன். அந்த சபை நடவடிக்கைகள் எனக்கு நன்கு தெரியும்.

நான் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் மாநில அரசுக்கு உதவ முடியும். தமிழக மக்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாநிலங்களவை எம்.பி.யாக செய்வேன். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து தமிழக மக்களுக்கு நன்மைகளை பெற்று தருவேன்… என்றார் ஜி.கே.வாசன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.