போலீஸார் வீடுகளுக்கு பால் விநியோகம்! முடிவைக் கைவிட்ட முகவர்கள் சங்கம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
aavin milk
aavin milk

“சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது” என்று, பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பால் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்….

கொரோனா பேரிடர் காலமான தற்போது தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதால் அது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கும், காவல்துறை தலைவர் கவனத்திற்கும் கொண்டு சென்றும் உரிய நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்வதில்லை என்கிற முடிவை கனத்த இதயத்துடன் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு அதற்கான அறிவிப்பை நேற்று காலை வெளியிட்டிருந்தோம்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பால் நிறுத்த அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தினர். மேலும் காவல்துறை தரப்பில் இருந்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகவும் பேசினர்.

பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகம் முழுவதும் பால் முகவர்கள் காவல்துறையினரால் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து பேசியதின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப் பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் பேசியவர்கள் தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து தமிழகம் முழுவதும் பால் விநியோகம் செய்யும் பால் முகவர்களுக்கு காவலர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப் படும் என்கிற உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர்.

இதை அடுத்து இரவு 10 மணிக்கு மேல் எங்களது சங்க மாநில நிர்வாகிகளின் இணையதள சந்திப்பு (Zonal Meeting) நடைபெற்றது. அதில் மூத்த பத்திரிகையாளர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு, பத்திரிகையாளர் சங்கங்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இறுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலும் எங்களது போராட்டத்தை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் பால் முகவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து நன்கறிந்து ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.