தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில்,புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பைச் சேர்ந்த பாஸ்கர் (28) புதிய தமிழகம் கட்சியின் நகர செயலாளராக இருந்தார். இவர், பிப்.23ல் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குள தெருவை சேர்ந்த கணேசன் (வயது 23), விக்னேஷ்(22), பாதாளம் (23), இசக்கி ஆனந்த் (20), சிவா (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், புதிய தமிழகம் பிரமுகர் பாஸ்கர் கொலை தொடர்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை 24ஆம் தேதிக்கு மாஜிஸ்ட்ரேட் சங்கர் ஒத்தி வைத்தார். பின்னர் சுரேஷ் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுரேஷ் ஆஜர் படுத்தப் படுவதையறிந்த அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு குவிந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.
- Home
- உள்ளூர் செய்திகள்
- ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் பிரமுகர் கொலையில் பார்வர்ட் பிளாக் பிரமுகர் கைது: பதற்றம்
