சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
former-judge-vallinayagam
former-judge-vallinayagam

நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா எழுதியிருக்கும் அறிக்கை வரிகள் குறித்து முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம் கருத்து தெரிவித்திருந்தார். அதில், சூர்யா தன் கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சூர்யாவின் கேள்வி குறித்து அவர் குறிப்பிட்டிருப்பது…

நீதிமன்றம் என்பது புனிதமான ஒரு கோயில். அதனால்தான் `Temple of Justice’ என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தார்கள்.

ஆனால், நடிகர் சூர்யாவோ, `உங்களுக்கு மட்டும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வைத்துக் கொண்டீர்களே… அது மாதிரியான வசதியை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் வழங்கவில்லை?’ என்று நீதிமன்றத்தை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்தக் கேள்வியை அவர் முறையாக நீதிமன்றத்தில்தான் எழுப்பியிருக்க வேண்டும்.

ஏனெனில், ஒரு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பைத் தவறு என்று சொல்லக்கூடிய உரிமை, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும்கூட, கீழமை நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீட்டுக்காகச் செல்லும்போதுதான் சொல்ல உரிமை இருக்கிறது. மாறாக, இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர் தீர்ப்பு குறித்து விமர்சித்தால், அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்.

இப்படி ஒவ்வொரு தீர்ப்பையும் தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டால், நீதிமன்றத்தின் மீதான மாண்பே குலைந்துபோகும். இதேபோன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்தான் அண்மையில் பிரசாந்த் பூஷணுக்கு `ஒரு ரூபாய் அபராதம்’ செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

சாதாரணமாக ஒரு தலைவர் சிலையில் வேறு ஏதேனும் ஆடையைக் கட்டிவிட்டாலோ, தண்ணீரை ஊற்றி விட்டாலோ அல்லது சிலையின் கையை உடைத்து விட்டாலோ மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஆக, ஒரு சிலையின் மீது எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக் கிறார்களோ அதேபோல், தெய்வத்தின் இருப்பிடமான நீதிமன்றத்தின் மீதும் மதிப்பு வைத்திருக்க வேண்டும் அல்லவா…

நான் வழக்கறிஞராகவும் நீதியரசராகவும் நீண்டகாலம் பணிபுரிந்திருக்கிறேன். `என் தாயைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என்பதுபோல், நீதிமன்றத்தின் மரியாதையைக் குறைக்கும் விதமாக யார் பேசினாலும் அதை ‘கருத்து சுதந்திரம்’ என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.