யூரோ 2021: இறுதிக்குத் தகுதி பெற்ற அணி!

உலகம் விளையாட்டு
euro cup 2021
euro cup 2021

யூரோ 2020 அரையிறுதிப் போட்டிகள்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


இன்று, 8 ஜூலை 2021 அதிகாலை யூரோ 2020இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இங்கிலாந்து – டென்மார்க் நாடுகளுக்கிடையே லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் இந்திய நேரப்படி 0030 மணிக்கு நடந்தது. யூரோ 2020 இறுதிப் போட்டியை எட்ட இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வென்றது.

புதன்கிழமை டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் 2020 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இத்தாலிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது. ஹாரி கேன் கூடுதல் நேர ஆட்டத்தின்போது ஒரு கோல் அடித்தார். கூடுதல் நேரத்தின் முதல் பதினைந்து நிமிடத்தில், டென்மார்க்கின் காஸ்பர் ஷ்மிச்செல் கோலுக்குச் செல்லவிருந்த பந்தினைத் தடுத்தார். ஆனால் கேன் காஸ்பர் தடுத்து அனுப்பிய பந்தினை கோலுக்கு அனுப்பி இங்கிலாந்திற்கு கேன் வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

காலிறுதியில் உக்ரைனுக்கு எதிராக இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் டென்மார்க் செக் குடியரசிற்கு எதிராக வெற்றிபெற்ற அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

கோப்பைக்கான ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன்னரே இங்கிலாங்கு கோப்பையை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் டென்மார்க் அணி 30ஆவது நிமிடத்தில் ஆச்சரியமான முன்னிலை பெற்றது.

இளைஞர் மைக்கேல் டாம்ஸ்கார்ட் ஒரு அருமையான ஃப்ரீ கிக் அடித்தார். இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் ஜோர்டான் பிக்போர்டால் அதனைத் தடுக்க முடியவில்லை. இந்த யூரோ போட்டிகளில் ஒரு நேரடி ஃப்ரீ கிக் மூலம் முதல் முறையாக ஒரு கோல் அடிக்கப்பட்டது இந்த ஆட்டத்தில்தான்.

euro 2021
euro 2021

இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் கடந்த 725 நிமிடங்கள் நீடித்த கடந்த போட்டிகளில் இதுவரை ஒரு முறைகூட கோலடிக்கவிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கின் முன்னணி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ரஹீம் ஸ்டெர்லிங் நோக்கிச் செல்லும் ஒரு கிராஸாக அடிக்கப்பட்ட ஒரு பந்தைத் தடுக்க சறுக்கியபோது, டென்மார்க் அணியின் சைமன் கஜேர் ஒரு சொந்த கோலடித்து இங்கிலாந்து கோல் கணக்கைச் சமன் செய்ய வாய்ப்பளித்தார்.

இறுதி இரண்டாம் பாதியில் ஏராளமான கோலடிக்கும் முயற்சிகள் இருந்தன, ஆனால் இரு அணிகளும் கோலடிக்காததால் விளையாட்டு கூடுதல் நேரத்திற்கு சென்றது. இது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஏழாவது நிகழ்வாகும்.

இந்தப் போட்டிகளில் இது கேனின் நான்காவது கோல் ஆகும். இங்கிலாந்து இத்தாலி இடையேயான இறுதிப் போட்டி லண்டன் விம்ப்லி மைதானத்தில் 12 ஜூலை அதிகாலை இந்திய நேரப்படி 003 மணிக்கு நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.