arapaliswarar - 2026

அறப்பளீஸ்வர சதகம்: மூடரை திருத்தும் முயற்சி!

ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் இலக்கியம் கட்டுரைகள்
arapaliswarar - 2026

செயற்கருஞ் செயல்

நீர்மேல் நடக்கலாம்! எட்டியும் தின்னலாம்!
நெருப்பைநீர் போற்செய் யலாம்!
நெடியபெரு வேங்கையைக் கட்டியே தழுவலாம்!
நீள்அர வினைப்பூ ணலாம்!
பார்மீது மணலைச் சமைக்கலாம் சோறெனப்
பட்சமுட னேஉண்ண லாம்!
பாணமொடு குண்டுவில கச்செய்ய லாம்! மரப்
பாவைபே சப்பண் ணலாம்!
ஏர்மேவு காடியும் கடையுற்று வெண்ணெயும்
எடுக்கலாம்! புத்தி சற்றும்
இல்லாத மூடர்தம் மனத்தைத் திருப்பவே
எவருக்கும் முடியா துகாண்!
ஆர்மேவு கொன்றைபுனை வேணியா! சுரர்பரவும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

விரும்பிய ஆத்தியையும் கொன்றையையும் புனைந்த சடைமுடியுடையவனே!, வானவர் வாழ்த்தும் தூயவனே!,
அருமை தேவனே!, தண்ணீரின்மேல் நடந்து செல்லலாம், (கசப்பையுடைய) எட்டிக்காயையும்
தின்னலாம், (வெப்பமுடைய) தீயை
(குளிர்ந்த) நீரைப்போல் ஆக்கலாம், நீண்ட பெரிய வேங்கையைக் கட்டித் தழுவலாம்
(நஞ்சுடைய) நீண்ட பாம்பை (அது கடிக்காமல்) மேலே அணிந்து கொள்ளலாம், உலகத்திலே மணலைச் சோறாகச் சமைக்கலாம் அன்புடன் (அந்த மணற்சோற்றை) உண்ணலாம், அம்பையும் துப்பாக்கி, பீரங்கி ஆகியவற்றின்
குண்டுகளையும் (நம்மீது படாமல்) விலகும் வண்ணம் புரியலாம், மரப் பதுமையைப் பேசும்படி செய்யலாம், அழகிய காடியையும் கடைந்து வெண்ணெயையும் எடுக்கலாம், சிறிதும்
அறிவற்ற பேதையரின் உள்ளத்தைச் சீர்திருத்த யாவருக்கும் இயலாது,
காண் :

செயற்கருஞ் செயல் செய்வோரும் மூடரைத் திருத்த முடியாமல் திகைப்பர் என்பதாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.