ind ban test 1 - 2026

IND Vs BAN முதல் டெஸ்ட்: நான்காம் நாளில் தாக்குப் பிடித்து ஆடிய வங்கதேசம்

விளையாட்டு
ind ban test 1 - 2026

இந்திய வங்கதேச முதல் டெஸ்ட் – நான் காம் நாள் – 17.12.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் 404; இரண்டாவது இன்னிங்க்ஸ் 258/2 டிக்ளேர்டு (கில் 110, புஜாரா 102*, கலீத் 1-51). வங்கதேசம் முதல் இன்னிங்க்ஸ்-150 (முஷ்பிகுர் 28, மெஹிதி 25, குல்தீப் 5-40, சிராஜ் 3-20); இரண்டாவது இன்னிங்க்ஸ் 272/6 (சாண்டோ 67, ஜாகிர் 100, ஷாகிப் அல் ஹசன் 40, அக்சர் படேல் 3/50, குல்தீப், அஷ்வின், உமேஷ் தலா ஒரு விக்கட்).

நாலாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 4 விக்கட்டுகள் மட்டுமே தேவை. தற்போது வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 40 ரன்களுடனும், மெஹதி ஹசன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளதால் இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று நாலாம் நாள் ஆட்டத்தின்போது வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் ‘நஜ்முல் உசைன்’, ‘ஜாகிர் ஹசன்’ ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 124 ரன்கள் வரையில் வங்கதேசம் விக்கெட் இழக்கவில்லை. இந்த இணையை உமேஷ் யாதவ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் நஜ்முல் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 156 பந்துகளை எதிர்கொண்ட அவர் 67 ரன்கள் எடுத்திருந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 224 பந்துகளில் சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, முஷ்பிகுர் ரகிம் 23, நூருல் ஹசன் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

உமேஷ் யாதவ், அஷ்வின் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வங்கதேசம் வெற்றி பெற இன்னும் 241 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. டிரா செய்ய வேண்டும் என்றால் நாளை நாள் முழுவதும் அந்த அணி தாக்குப்பிடிக்க வேண்டும்.

அதே நேரம் இந்திய அணியின் வெற்றிக்கு 4 விக்கெட் மட்டுமே தேவைப்படுவதால் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.