
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 9 – 2003 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2003 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை எட்டாவது உலகக் கோப்பை ஆகும். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்பட்டது. 2003 பிப்ரவரி 9 முதல் மார்ச் 23 வரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யா இணைந்து நடத்தியது. இந்த உலகக் கோப்பைப் பதிப்பு ஆப்பிரிக்காவில் முதன்முதலில் விளையாடப்பட்டது.
இந்த போட்டியில் 14 அணிகள் பங்கேற்றன. அந்த நேரத்தில் உலகக் கோப்பை வரலாற்றில், பங்குபெறும் அணிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையாகும் இது. மொத்தம் 54 போட்டிகள் விளையாடப்பட்டன. இப்போட்டியில் 1999 கிரிக்கெட் உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பு பின்பற்றப்பட்டது. அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன, மேலும் ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்கள் சூப்பர் சிக்ஸ் நிலைக்குத் தகுதி பெற்றன.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அனைத்து அணிகளும் குரூப் ஸ்டேஜில் வெளியேற்றப்பட்டன. டக்வொர்த் லூயிஸ் முறை விதிகளை தவறாகப் புரிந்துகொண்டதால் தென்னாப்பிரிக்கா 1 ரன்னில் சூப்பர் சிக்ஸ் சுற்றைக் கோட்டைவிட்டது. ஜிம்பாப்வேயில் நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக இங்கிலாந்து அங்கு சென்று விளையாடமல் தவிர்த்து, சூப்பர் சிக்ஸ் வாய்ப்பை இழந்தது. இறுதியில் ஜிம்பாபே அணி சூப்பர் சிக்ஸில் நுழைந்தது.
இதேபோல், நியூசிலாந்து கென்யாவுடனான போட்டியை இழந்தது. விளையாட்டின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே, தடை செய்யப்பட்ட போதைப்பொருள் உட்கொண்டதாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
குரூப் A பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாபே அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தேர்வாயின; இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகள் தேர்வாகவில்லை. குரூப் B பிரிவில் இலங்கை, கென்யா, நியூசிலாந்து அணிகள் சூப்பர் தேர்வாயின. தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், கனடா, வங்கதேசம் அணிகள் தேர்வாகவில்லை.
குரூப் ஆட்டங்களில் இந்தியா பாகிஸ்தானை 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தில் சச்சின் 98 ரன்கள் அடித்தார்.
சூப்பர் சிக்ஸ் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, இலங்கை அணிகள் அடுத்த அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வாயின. அரையிறுதியில் இந்தியா கென்ய அணியையும் ஆஸ்திரேலியா இலங்கை அணியையும் எளிதில் வென்றன.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி, ஆஸ்திரேலியா தனது 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றது. இது ஆஸ்திரேலியாவின் மூன்றாவது உலகக் கோப்பை வெற்றியாகும்.
உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே அணி ஆஸ்திரேலியா ஆகும். பாகிஸ்தானிய வீரர் சோயிப் அக்தர், இங்கிலாந்துக்கு எதிரான குரூப் போட்டியில் மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி சாதனை படைத்து, கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையையும் படைத்தார்.
சச்சின் டெண்டுல்கர் 11 ஆட்டங்கள் விளையாடி 673 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். சௌரவ் கங்குலி மூன்று செஞ்சுரிகள் அடித்தார். ஜாகிர்கான் 18 விக்கட்டுகளும், ஸ்ரீநாத் 16 விக்கட்டுகளும் எடுத்தனர்.