
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 10 – 2007 போட்டி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
2007 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை ஒன்பதாவது கிரிக்கெட் உலகக் கோப்பையாகும், இது வெஸ்ட் இண்டீஸில் மார்ச் 13 முதல் ஏப்ரல் 28, 2007 வரை நடந்த ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். மொத்தம் 51 போட்டிகள் விளையாடப்பட்டன. 2003 போட்டியை விட இதில் இரண்டு அணிகள் அதிகமாக இருந்தபோதிலும் மூன்று ஆட்டங்கள் குறைவாக இருந்தன.
16 போட்டியிடும் அணிகள் ஆரம்பத்தில் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று ரவுண்ட் ராபின் சுற்றாக இருந்தது. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிடம் பெற்ற இரண்டு அணிகள் “சூப்பர் 8” வடிவத்திற்கு நகர்ந்தன. இதிலிருந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின, ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பையையும் ஒட்டுமொத்தமாக நான்காவது கோப்பையையும் வென்றது. 1999 முதல் இந்த போட்டியின் இறுதி ஆட்டம் வரை ஆஸ்திரேலிய அணி 29 முறை தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை செய்தது.
போட்டித் தொடருக்கு முந்னர் கோப்பையை வெல்லக்கூடும் எனக் கருதப்பட்ட இந்தியாவும் பாகிஸ்தானும் குரூப் ஸ்டேஜைக் கடக்கத் தவறிவிட்டன, அதே சமயம் வங்காளதேசம் மற்றும் உலகக் கோப்பையில் அறிமுகமான அயர்லாந்து இரு அணிகளும் “சூப்பர் 8” இல் முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி இடம் பெற்றன. கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் சுற்றைத் தாண்டிய இரண்டாவது துணை நாடு அயர்லாந்து ஆனது. முதல் நாடு 2003இல் கென்யாவாகும்.
பாகிஸ்தான் ஆட்டமிழந்த மறுநாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் வூல்மர் மரணமடைந்தார். மறுநாள் காவல்துறை அவரது மரணம் சந்தேகத்திற்குரியது என்று அறிவித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டது.
குரூப் A பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தன. குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம், இந்தியா, பெர்முடா: குரூப் C பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா: குரூப் D பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, பாகிஸ்தான், ஜிம்பாபே ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. “சூப்பர் எட்டு” சுற்றுக்குத்தேர்வான அணிகள் – ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத்தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து. முதல் நான்கு அணிகளும் அரையிறுதிக்குத் தேற்வாயின.
அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கட் வித்தியாசத்திலும் இலங்கை அணி நியூசிலாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றன. இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியா இலங்கையை 53 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த்-லூயிஸ் முறையில் வென்றது.
இந்தியா பெர்முடா அணிகள் ஆடிய முதல் சுற்று ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்திய அணி 413 ரன்கள் எடுத்தது. அதிக பட்ச வெற்றி வித்தியாசமாக 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த ஆட்டத்தில் 18 சிக்சர்கள் அடிக்கப்பட்டன; யுவராஜ் சிங் மட்டும் 7 சிக்சர்கள் அடித்தார். பெர்முடா அணியின் ஐந்து பேட்ஸ்மென்கள் ஐவர் ரன் எடுக்காமல் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தனர்.