
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், சுப்மன் கில்லை வெறும் 0.1 வினாடியில் பந்தை பிடித்து ‘ஸ்டம்பிங்’ செய்தார் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் தோனி. இதுவே உலகில் அதிவேக ‘ஸ்டம்பிங்’ என்று அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவரில் 214 ரன் குவித்தது. பின்னர் மழையால் ஆட்டம் தடைப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் சென்னை அணிக்கு 15 ஓவரில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடிய போதும், கடைசி இரு பந்தில் சிக்சர், பவுண்டரி அடித்து தூள் பறத்திய ரவீந்திர ஜடேஜா, சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில்லை, ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் தோனி ‘ஸ்டம்பிங்’ செய்து ஆட்டமிழக்கச் செய்தார். இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டு, தோனியின் ஸ்டம்பிங் வேகத்தையும் திறமையையும் பாராட்டி வருகின்றனர். அதாவது, சுப்மன் கில் பந்தை அடிக்காமல் தவறவிட, தோனி அந்த பந்தை பிடித்த 0.1 வினாடியிலேயே அதிவேகத்தில் ‘ஸ்டம்பிங்’ செய்தார். இது உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஸ்டம்பிங்காக பார்க்கப்படுகிறது.