லஞ்ச ஒழிப்பு அதிகாரிபோல நடித்து தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மூவர் கைது

உள்ளூர் செய்திகள்

fake-id சென்னை: சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்த மூவர் கைது செய்யப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் திருமுருகன் (52). இவரை சில நாள்களுக்கு முன்பு 3 பேர் சந்தித்துள்ளனர். அவர்கள், தாங்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். பின்னர் அவரிடம் பல கோடி கறுப்புப் பணம் உங்களிடம் இருப்பதாக புகார் வந்திருக்கிறது, அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் பணம் தரவேண்டும் என்று கூறினராம். மேலும் பணத்தை ஓரிரு நாள்களில் தரும்படி கூறிவிட்டு, தங்களது செல்பேசி எண்ணை திருமுருகனிடம் வழங்கிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால், அந்த நபர்கள் மீது திருமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் இருந்து அதிகாரிகள் எவரும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபர்கள் கொடுத்த செல்பேசி எண்ணில் திருமுருகன் தொடர்புகொண்டார். அதன்படி, திருமுருகன் வீட்டுக்கு காரில் வந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த சண்முகம் (35), சுமன் (23), இப்ராகிம் (42) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மூவரும் தங்களை போலீஸ் என்றும், பத்திரிகையாளர் என்றும் பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டை, போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது மோசடி வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.