1001383462 - 2026

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

சற்றுமுன்
1001383462 - 2026

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில் திரண்டனர் லட்சக்கணக்கான பக்தர்கள் .சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

சைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரையை அடுத்த அழகர் கோவிலில் நடைபெறும் சித்திரை விழாக்கள் இணைந்த விழாவாக இந்த பெருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்

1001383336 - 2026
Screenshot

மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ந் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து, சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா மஹாதேவா சிவசிவா முழக்கத்துடனும் தேரை பக்தர்கள் இழுத்தனர்

1001383301 - 2026

பெரிய தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை முன்னால் சென்றது. தொடர்ந்து, முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் சென்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக மாசி வீதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் இன்று மாலையில் அதிர்வெட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்படுகிறார். வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகருக்கு நாளை (30-ந் தேதி) மதுரை மூன்றுமாவடியில் பக்தர்கள் வெள்ளமென திரண்டு வரவேற்கும் எதிர்சேவை நடக்கிறது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (1-ந் தேதி) அதிகாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்து வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். இந்த பக்தி பரவசக்காட்சியை காண, தமிழகம் முழுவதிலும் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.