kadeswara subramaniam hindu munnani - 2026

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

சற்றுமுன் அரசியல் சென்னை தமிழகம்
kadeswara subramaniam hindu munnani - 2026

ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தன்று தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு தீபம் ஏற்றிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகர் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நான்கு இடங்களில் பேசிய நான்கு இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்துள்ளனர்.

நேற்று, பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் சென்னை நிகழ்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்து முன்னணி கடந்த வாரம் 4 ஆம்தேதி சென்னை மாநகரில் 19 இடங்களில் அறப்போராட்டத்தை நடத்தியது. காவல்துறை உயர் அதிகாரிகளின் நேரடி உத்தரவால் உள்ளூர் அதிகாரிகளின் ஒத்துழைப்பால், மக்களின் பேராதரவுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான்கு இடங்களில் காவல்துறை அதிகாரிகள் அவசரகதியில் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

ஆனால் நமது பாரத தேசத்தை, இந்து சமய நம்பிக்கைகளை, தமிழனின் கலாச்சாரத்தை இழிவுபடுத்தி பொது தளங்களில் பேசிய பல பேர் மீது இந்து முன்னணி சார்பில் புகார் கொடுத்தும் தமிழக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் மீது நள்ளிரவில் வழக்கு பதிவு செய்து விடியற்காலை கைது செய்துள்ளது. அதுவும் காவல்துறை அதிகாரிகள் தானாக வழக்கு பதிவுசெய்து, நான்கு இடங்களில் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைக்க, வேக வேகமாக செயல்பட்டதன் நோக்கம் தான் என்ன?

கடந்த திமுக ஆட்சியின் மீதான விசுவாசுத்துடன் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில அதிகாரிகளின் உள்ளடி வேலையா அல்லது தவெக ஆட்சியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு தான் ஒரு அதிகார மையம் என்று காட்டி, தனது செல்வாக்கை காட்ட காவல்துறையை ஏவிவிடும் உள்கட்சி சதியா? என்ற கேள்வி எழுகிறது.

வருகின்ற கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் கோரிக்கை.

இதை நீதிமன்றத் தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளது. இதனை வலியுறுத்தி ஜனநாயக வழியில் அரசுக்கும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்துக்களின் ஆழ்ந்த நம்பிக்கையை உணர்த்தவே இந்த ஆர்பாட்ட, அறப்போராட்டமானது நடைபெற்றது.

எனவே ஒருதலைப்பட்சமாக, யாருடைய தூண்டதலினாலோ கைது செய்யப்பட்ட இந்து முன்னணி பொறுப்பாளர் நான்கு பேரையும் விடுதலை செய்யவும், போடப்பட்ட வழக்குகளை நீக்கவும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.