மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி! சுறுசுறுப்படையும் மு.க.அழகிரி வட்டாரம்!

இந்தியா சற்றுமுன் சென்னை மதுரை லைஃப் ஸ்டைல்
modi speech assam - 2026

சென்னை: தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல், அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, மதுரை புறநகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பரிந்துரைக்கப் பட்டது. தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்தது.

அடுத்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. “அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்” என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செயல்பட தொடங்கினால் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் பலன் தரும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இதனை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் இன்னமும் தேதி உறுதி செய்யப் படவில்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய கையுடன் மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கி வைக்கிறார். இந்த சிறப்பு மருத்துவமனை ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலியிலும் மற்றொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதையும் மதுரையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பிரதமர் மோடியின் மதுரை வருகை, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருக்கும் மு.க.அழகிரி வட்டாரம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. திமுக.,வில் மீண்டும் சேர இயலாத நிலையில் தனிக்கட்சி, அல்லது தீவிர அரசியல் என்ற நிலைப்பாட்டில் அமைதியாக இருந்து வரும் அழகிரி, இம்முறை பிரதமர் மோடியுடன் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப் படுகிறது.

முன்னர் மோடி கோபாலபுரம் வந்து கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த போது, தாம் வீட்டில் இல்லாததற்காக வருத்தம் தெரிவித்து அழகிரி மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன்பின்னர் அழகிரியுடன் பாஜக., தேசியத் தலைவர்கள் தொடர்பில் இருந்தனர். அமித் ஷா அவருடன் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மோடி மதுரைக்கே வருவதால் மதுரையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

மதுரை மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிந்ததும் அன்றே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். அன்றைய தினம் முதல் கட்டமாக அவர் சென்னை, வேலூர், கோவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார் எனத் தெரிகிறது.

2 thoughts on “மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி! சுறுசுறுப்படையும் மு.க.அழகிரி வட்டாரம்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.