இடஒதுக்கீடு கோரி வன்முறை போராட்டம் – ரயிலுக்கு தீ வைப்பு

சற்றுமுன்
 
‘காபூ’ ஜாதியினர், இடஒதுக்கீடு கோரி ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர் காவல் நிலையம் ஒன்றுக்கும், காவல் துறைக்குச் சொந்தமான 8 வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
 
இதையடுத்து, கிழக்கு கோதாவரி பகுதியில் சென்று கொண்டிருந்த ரத்னாஞ்சல் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரையாகின. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வன்முறைச் சம்பவங்களால் ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
 
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடங்களுக்கு விரைந்த காவல் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
காபூ சமூகத்தை பிற்படுத்த வகுப்பினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தங்களது கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும், அதுதொடர்பாக அவர் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் காபூ சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
 
அப்போது காவல் துறையினர் தடியடி நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததாகவும் தெரிகிறது. இதனிடையே, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு கூட்டி மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக விவாதித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.