தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை !

சற்றுமுன்
 
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் தவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது.இதேபோல் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய இருக்கிறது.
 
இந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷன் இன்று (01-02-2016) ஆலோசனை நடத்துகிறது.
 
எனவே தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விவரம் இம்மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்திலோ அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று வருகின்றன.
 
தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.
 
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார்.
 
தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.