காவிரி நதியில் கழிவுநீர் : கர்நாடக அரசாங்கம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

சற்றுமுன்
 
காவிரி நதியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசாங்கம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
 
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காவிரி, பெண்ணையாறு ஆகியவற்றில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தது.
 
அதில், காவிரி, பெண்ணையாறு ஆகிய இரு நதிகளும் கர்நாடக மாநிலத்தில் உருவாகி, தமிழகம் வழியாக ஓடுகிறது. தமிழகத்தின் வாழ்வாதாரமாக இரு நதிகளும் விளங்கி வருகின்றன.
 
இந்நிலையில், கர்நாடகத் தொழிற்சாலைப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இரு நதிகளிலும் கலந்து தமிழகத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
 
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எடுக்கப்பட்ட மாதிரிகள் மீது நடத்திய ஆய்வில் மனிதர்கள், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நச்சுப்பொருள்கள் கலந்த கழிவுகள் நதியில் அதிகளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
எனவே, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நதியில் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கும், அதை உறுதிப்படுத்த வேண்டும் எனமத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
 
இந்திய அரசியல் சாசன சட்டப்பிரிவு 131-இன்படி, மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு நீதிபதி ஆர்.கே.அகர்வால் முன்று இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கர்நாடக மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.