தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 6.5 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை

சென்னை:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில், நேற்று வரை 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் இதுவரை, 2 லட்சத்து 84 ஆயிரத்து 483 இறந்த வாக்காளர்களின் பெயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சத்து 58 ஆயிரம் இரட்டைப் பதிவுகள், 7 ஆயிரத்து 500 ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்ட பெயர்கள் உள்ளன. 97 ஆயிரம் பேர் தாமாக முன்வந்து, பெயர்களை நீக்க படிவம் 7 சமர்ப்பித்துள்ளனர். இந்த வகையில், 6 லட்சத்து 46 ஆயிரத்து 983 பேர் பெயர்கள் நீக்கப்படும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. படிவம் 7 சமர்ப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், எண்ணிக்கை சற்றே உயரலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்றுடன் முடிகிறது. இறுதியாக அடுத்த சில தினங்களில் நீக்கப்படுவோர் பட்டியலில் உள்ள பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு, துணை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.