அதிமுக., திமுக., இரண்டு விளம்பரத்திலும் நடித்து வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கும் பாட்டி!

சற்றுமுன் தமிழகம்

சென்னை:

இணையத்திலும் பொது இடங்களிலும் சரி… இப்போதைய தேர்தல் களத்திலும் இன்றைய பேச்சு கஸ்தூரி பாட்டியைப் பற்றிதான்.

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரச்சார விளம்பரங்களிலும் நடித்தவர் இந்த கஸ்தூரிப் பாட்டி. தொலைக்காட்சிகளிலும் இணையத்திலும் ‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம், புரட்சித் தலைவி அம்மா தான்’ என்று சொன்னபடி அதிமுக விளம்பரத்தில் தோன்றும் இந்தப் பாட்டி, அடுத்த சில நிமிடங்களில், ‘வானத்துல பறக்குறவங்களுக்கு நம்மளுடைய பிரச்னை எப்படி தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா போதும்…!’ என்று திமுக விளம்பரத்திலும் தோன்றுகிறார்.

ஒரே பாட்டியை ஆள் வித்தியாசம் கூடத் தெரியாமல் இரண்டு கட்சிகளும் தங்கள் விளம்பரங்களில் நடிக்க வச்சிருக்காங்களே… என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் இணையவாசிகள்.

இன்னும் சிலரோ.. “அந்தப் பாட்டி ஒரு அன்றாடங் காய்ச்சி. சாதாரண துணை நடிகை. வாங்கிய பணத்துக்கு நடிச்சுக் கொடுத்திருக்கு.. இதில் தப்பென்ன?’ என்று ஆதரிக்கிறார்கள்.

சரி, இந்தப் பாட்டி எப்படி இந்த வித்தியாசம் தெரியாமல் இந்த இரண்டு வெவ்வேறு துருவங்களான கட்சிகளின் விளம்பரங்களிலும் நடித்தார்?

கஸ்தூரிப் பாட்டியோ நடந்த குளறுபடிகளால் ரொம்பவே பயந்து போயிருக்கிறார். இந்த விளம்பரங்களால் தனக்குப் பிரச்னை வந்துவிடுமோ என்ற பயத்துடனேயே அவர் வெளியில் பேசுகிறார். அவர் கோபமெல்லாம் தன்னை திமுக விளம்பரத்தில் நடிக்க வைத்த ஏஜென்ட்டின் மீதுதான்.

“இது எந்தக் கட்சி விளம்பரம்னெல்லாம் சொல்லல… காசு தர்றோம்.. ஒரு விளம்பரத்துல நடிக்கணும்.. அரை நாள்தான்னு கூப்பிட்டாருங்க. நானும் அவங்க சொல்லிக் கொடுத்தத அப்படியே பேசிட்டு வந்துட்டேன்,” என்கிறார் கஸ்தூரிப் பாட்டி.

இவர் முதலில் நடித்தது அதிமுக விளம்பரத்தில்தான். ஆனால் ஒளிபரப்பில் திமுக முந்திக் கொண்டது. இதனால், பாட்டி பலிகடா ஆகிவிட்டார்.

“இந்த திமுக விளம்பரம் வந்த பிறகு வெளிய தல காட்ட முடியல… எல்லாரும் கேலி பண்றாங்க. சின்னப் பசங்க கூட போதும்மா போதும்…னு சொல்லிக் காட்டுதுங்க. என்ன பண்றதுன்னு தெரியல… திமுக விளம்பரம்னு சொல்லியிருந்தா நான் நடிச்சிருக்கவே மாட்டேன். இதனால எனக்கு ஏதாச்சும் பிரச்னை வருமா தெரியல… என் பேர்ல எந்தத் தப்புமே இல்ல…. ஏற்கெனவே நான் அம்மா விளம்பரத்தில் நடித்ததை அந்த நபரிடம் கூறினேன். ‘அதனால் என்ன பரவாயில்லை’ எனக்கூறி, ரூபாய் கொடுத்து அனுப்பினர். நான், எந்தக் கட்சியிலும் கிடையாது; யாரையும் ஆதரிக்கவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு நல்லது செய்தால் போதும்…” என்று பரிதாபத்துடன் சொல்கிறார்.

கஸ்தூரி பாட்டி வெகுகாலமாக ஒரு துணை நடிகையாக நடித்து வந்தாலும், இந்த இரண்டு கட்சி விளம்பரங்களும் இப்போது அவரை பிரபலமாக்கிவிட்டது. துணை நடிகையாக சொற்ப சம்பளமே பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்தவர், இந்த இரு விளம்பரங்களிலும் அதனினும் சொற்பமாக பணம் பெற்றுக் கொண்டுள்ளார். அதிமுக விளம்பரம் மூலம் கிடைத்தது ரூ 1500. திமுக விளம்பரம் மூலம் கிடைத்ததோ ரூ 1000 மட்டுமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.