வைணவ மார்க்கம் தழைத்தோங்கச் செய்த குருவாக விளங்குபவர் ஸ்ரீராமானுஜர். அவரை நினைக்காது வைணவர்கள் எவரும் தம் அன்றைய காலைப் பொழுதைத் தொடங்குவதில்லை.
வைணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பூஜைகளில் ராமானுஜரின் தெய்வீக ஆணை தழைத்தோங்கட்டும் என்று வாழ்த்துப் பாடி நிறைவு செய்வது வழக்கம். ஆயிரம் வருட காலமாய் இதுநாள் வரை சாதி பேதம் அறுத்த இந்த எளிய மார்க்கத்தை அழைத்துக் கொண்டு வந்திருப்பது எதிராஜரான அவரின் அருள் அன்றோ!
ஸர்வ தேச தசா காலே ஷ்வ வ்யாஹத பராக்ரமா |
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம் ||
ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா ப்ரதி வாஸரமுஜ் ஜ்வலா |
திகந்தவ்யாபினீ பூயாத் ஸô ஹி லோக ஹிதைஷிணீ ||
“இதன் பொருளாவது… எல்லா இடங்களிலும் எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் தடையற்ற பேராற்றல் பொருந்திய பகவத் ராமானுஜரின் தெய்வீக ஆணை வளரட்டும். மேன்மேலும் வளரட்டும். ராமானுஜரின் தெய்வீக ஆணை நாள்தோறும் மிகுந்த ஒளி வீசி, திசைகளின் கோடிகளில் சென்று பரவட்டும். ஏனென்றால் அந்த தெய்வீக ஆணை மக்களுக்கு என்றும் நன்மையையே நாடுவது…” என்பதே. இதனை ஒவ்வொரு வைணவரும் தங்கள் இல்லங்களிலும், ஆலயங்களிலும் உணர்வு பூர்வமாகச் சொல்லி, தங்கள் குருவின் மீதான பற்றை வெளிப்படுத்துகிறார்கள்.
காரணம், அவர் காட்டிய மார்க்கம் மன வேற்றுமை அறுத்து அனைவரையும் ஒன்றிணைத்தது என்பதே. அவர் வாழ்வின் ஓர் உதாரண வெளிப்பாடு…
உறையூர்ச் சோழனிடம் மெய்காப்பாளனாக இருந்த, பிள்ளை உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடைபிடித்துப் போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே
ஒரு நாள் நண்பகல். காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற உறங்காவில்லியின் செயல் கண்டார். “இப்படியோர் பித்தரோ’ என்று வியந்து, அவரைத் திருத்திப் பணிகொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரோ, “மனையாளின் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன்’ என்றார். ஸ்ரீராமானுஜர் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்… “இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக் காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்… கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ’ என்றார்.
சொல்லிவிட்டு, அரங்கனின் சந்நிதிக்கு அழைத்துச் சென்றார். அரவுப் படுக்கையில் துயிலும் அரங்கனின் பேரழகை, அவன் கண்ணழகைக் காட்டி, அதை அனுபவித்து ரசிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.
பங்குனி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி நேரம், நீராடப் போகும் போது, முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது. பிராமணன், தாழ்குலத்தோனைத் தொடுவதாவது என்று கூறி, சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர், “எத்தனைதான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம் (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடும். எனவே பிறவியால் உண்டான ஆணவத்தை, ஆணவம் சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்…’ என்றார்.
பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள வேண்டும்.
உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றினார். அவர் அரங்கனிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட பின்னர், சோழனிடம் செய்த சேவையை விட்டு, அரங்கன் மீது அன்பு கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்துக்குப் பாதுகாவலாய் செல்லத் தொடங்கினார். உறங்காவில்லி பரமபதித்தபோது, பொன்னாச்சியார் கண்ணீர் உகுக்கவில்லை. இறுதிச் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள். இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவி தாசராய் இருந்தபோது மனைவியின் பின்னே இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்போ, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். பக்தியின் பெருமை அத்தகையது. காரணமாக இருந்தது, ஸ்ரீராமானுஜரின் திருவுள்ளம்.
கி.பி.1017 இல் அவதரித்த ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்ஸவம் இன்று துவங்கும் நிலையில், அவரின் சமூகக் கருத்துகள் அனைவர் மனத்தையும் எட்ட வேண்டும்.



