‘த்ரில்’ வெற்றி பெற்ற இந்தியா! அட… ஆப்கன் அணிக்கு எதிராகத்தான்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

ddd - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடரில், ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார் இந்தியாவின் முகமது ஷமி. இந்தப் போட்டியில் இந்திய அணியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். காயமடைந்த வீரருக்கு பதிலாக அணியில் இடம்பெறுபவர் சாதனைகளைப் படைப்பது, முகமது ஷமி விஷயத்திலும் மெய்ப்பிக்கப் பட்டது என்று கூறுகின்றனர் ரசிகர்கள்.

இங்கிலாந்தில் 12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. சௌதாம்ப்டனில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ரோகித் சர்மா-1, லோகேஷ் ராகுல்- 30, விஜய் சங்கர் – 29, விராட் கோலி – 67, தோனி – 28, பாண்ட்யா – 7 என முக்கியமான வீரர்கள் சற்று சொதப்பலாக ஆடி, ரன்கள் எடுத்தனர். முகமது ஷமி- 1, கேதர் ஜாதவ் – 52 ஆகியோர் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

இதை அடுத்து இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 224 ரன் மட்டுமே எடுத்தது. இவ்வளவு குறைவான ரன்களை இந்திய அணி எடுத்ததும், ஆப்கன் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

fff - 2026அதே போல், எளிய இலக்கைத் துரத்திய ஆப்கன் அணியில், துவக்கம் நன்றாக அமைந்தது என்றாலும் பின் வரிசையில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன.

ஹஸ்ரத்துல்லா -10, குல்பதீன் – 27 ரன் எடுத்தனர். பும்ராவின் ஒரே ஓவரில் ரஹ்மத் ஷா – 36, ஹஸ்மதுல்லா – 21 ஆட்டம் இழந்தனர். ஜட்ரன் – 21, ரஷித் கான் – 14 ரன் எடுத்து வெளியேறினார்.

ஆட்டம் ஆப்கன் அணியின் பக்கமே இருந்த நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. அந்நிலையில் மொகம்மது ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் நபி.

2-வது பந்தில் ரன் எடுக்காத நபி, ஷமியின் 3 வது பந்தில் அவுட்டானார். அவர் 52 ரன் எடுத்திருந்தார்! இதை அடுத்து ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது! ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில், அப்தாப் போல்டானார். முஜீப் போல்டானார். ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

இதனால், ஆப்கன் அணி 49.5 ஓவரில் 213 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

india vs afghanistan - 2026உலகக் கோப்பை அரங்கில் இந்த வெற்றி இந்திய அணிக்கு கிடைத்த 50வது வெற்றி! அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது இந்தியா.

முதலிடத்தில் 67 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியாவும், 52 வெற்றிகளுடன் நியூசிலாந்தும் உள்ளன. மூன்றாவது இடத்தில் இந்தியா 50 வெற்றிகளுடன் நீடிக்கிறது. தொடர்ந்து இங்கிலாந்து (45), மேற்கு இந்திய தீவுகள் (42), பாகிஸ்தான் (41), இலங்கை (39), தென் ஆப்ரிக்கா (36) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.