
— கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர் கலைமகள்
காஞ்சிபுரம் பக்கத்தில் சாலையில் நடந்து கொண்டு வருகையில் புளிய மரம் ஒன்று கண்ணில் தட்டுப் பட்டது! புளிய மரம் பக்கம் போகாதே!! பேய் இருக்கும் என்றான் எனது நண்பன்.
உலகம் முழுவதும் பேய் பற்றிய ஆராய்ச்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இயற்கையான மரணம் தவிர மற்ற மரணங்கள் மனிதனுக்கு சம்பவிக்கும் பொழுது (விபத்து மற்றும் தற்கொலை) அந்த மனிதனுடைய ஆவி நேரடியாக சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோச் செல்லாமல் பூமியிலேயே சுழன்று கொண்டிருக்கும். இதைத்தான் பேய் பிசாசு என்கிறார்கள். இயற்கையான மரண காலம் வரை இந்த நிகழ்வு நடைபெறும் என்பது பொதுவாக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது!
விஞ்ஞானப் பூர்வமாக இதுவரை பேய் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வுகள் பேய் என்கின்ற ஒன்று இல்லை என்று தான் சொல்கின்றன. பாழடைந்த வீடுகளிலோ அல்லது சில வீதிகளிலோ அளவுக்கு அதிகமான காந்த ஈர்ப்பு இருக்கும்பொழுது புதிய ஒலி, ஓசைகளும், நம் மீது ஏதோ ஒன்று தொடுவது போன்ற உணர்வுகளும் ஏற்படுவதுண்டு! இதைக் கூட மக்கள் பேய் என்று எண்ணி இருக்கலாம் என்று மேலைநாட்டு அறிஞர்கள் சொல்கிறார்கள்.
புளிய மரத்தில் பேய்கள் குடி கொண்டிருக்கும் என்பதில் துளி கூட உண்மை இல்லை! புளிய மரத்தின் அடியில் அதிகம் செல்லக்கூடாது என்பதற்கு என்ன காரணம்? என்றால் புளிய மரம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும். அதன் அடியில் அதிக நேரம் நின்றால் உஷ்ணம் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அறிவியலும் இதை ஒப்புக்கொள்கிறது!
உண்மையைச் சொல்லப் போனால் புளியமரம் புனிதமானதும் கூட!
தெய்வக் குழந்தை அது! அந்தக் குழந்தை பால் குடிக்காமல் எத்தனை நாள் இருக்கும்? பெற்றோர்களுக்கு கவலை வந்தது. ஆனால் குழந்தை மாறனுக்கோ எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு பகவத் நாமாவை மனதில் இறுத்திக் கொண்டு அப்படியே வளர்ந்து வந்தது. திருக்குருகூர் கோயிலுக்குக் கொண்டுசெல்ல பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். அந்தக் குழந்தை அங்கு சென்றது, ஆனால் அங்கு இருக்கக்கூடிய ஒரு புளிய மரத்தடிக்குச் சென்று அங்கேயே பதினாறு ஆண்டுகள் தவம் செய்யத் தொடங்கிவிட்டது!
ஞானம் வளர்ந்தது. தத்துவங்கள், சாத்திரங்கள் என அனைத்தையும் அங்கேயே கற்றுக்கொண்ட மாறனிடமிருந்து வீசிய தெய்வீக ஒளி எல்லோரையும் கவர்ந்தது. ‘இந்தப் பிள்ளையிடம் ஏதோ சிறப்பு இருக்கிறது’ என்று ஊரில் உள்ளோர் வியப்போடுப் பேசிக்கொண்டார்கள்.
அந்த ஞான ஒளியை, அயோத்தியில் ஒருவர் கண்டார். அவர் தான் மதுரகவி ஆழ்வார்! இந்த ஒளியைப் பார்த்ததும் மதுரகவி ஆழ்வார் திகைத்துப்போனார். இது எங்கிருந்து வருகிறது? என்று யோசித்தார். அதைத் தேடிச் செல்லத் தீர்மானித்தார். அயோத்தியிலிருந்து திருக்குருகூருக்கு வந்தார்.
சரயு நதியிலிருந்து தாமிரபரணி நோக்கி அவருடைய புனித பாதங்கள் பயணித்தன! தவத்தில் இருந்த மாறனை, மதுரகவி ஆழ்வார்தான் விழிக்கச் செய்தார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர் “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால்”
“எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?
தியானத்திலிருந்த அந்த குழந்தை சொன்ன பதில் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”.
மதுரகவி ஆழ்வார் ‘செத்தது’ என்று சொல்வது உடம்பைதான். அது அறிவற்ற பொருள் அல்லவா?அந்த உடம்பில் சிறியது, அதாவது உயிர் பிறக்கிறது. அந்த உடலை இயக்குகிறது.உடம்பில் உயிர் சென்று சேர்கிறது என்றால், அது பிறக்கிறது என்று அர்த்தம். அப்போது அது எதை அனுபவித்துக்கொண்டு எங்கே இருக்கும் என்பதுதான் மதுரகவியாரின் கேள்வி.
ஒருவன் ஜனிக்கிறான் என்றால், அதன் காரணம் அவன் செய்த பாவ புண்ணியத்தைப் பொறுத்து அமைகிறது! பூமியில் பிறந்த வினைகள் தீரும் வரை அந்த ஆத்மா அந்த உடலிலேயே கிடக்கவேண்டியதுதான்.
இந்தப் பதிலைக் கேட்டதும் மதுரகவி ஆழ்வார் மகிழ்ந்தார். இப்படி பதில் சொன்ன அந்தக் குழந்தைதான் நம்மாழ்வார்.
நம்மாழ்வாருடைய கூர்மையான சூட்சமமான அறிவையும் பக்தியையும் கண்டு வியந்து, அவரையே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். புளிய மரத்தடியில் தான் நம்மாழ்வாருக்கு சகலமும் கிட்டியது!!
பாண்டி நாட்டில் தன் கணவர் பரமதத்தன் இருக்கும் இடம் தேடி போனார் காரைக்கால் அம்மையார். ஆனால் கணவரோ அவரைத் தெய்வப் பெண்மணி என எண்ணி தனது இரண்டாவது மனைவியிடம் சொல்லி அவர் பாதம் தொட்டு குழந்தைகளுடன் வணங்கினார்!!
தன் கணவர் நிலை உணர்ந்து தன் உடல் நீக்கி பூத வடிவம் கொண்டு பேய் உருவில் தலைகீழாக நடந்து கைலாயம் புறப்பட்டார் காரைக்கால் அம்மையார். அம்மையின் உருவைப் பார்த்து மனம் இறங்கி சிவபெருமான் “அம்மையே” என அழைத்து அவருக்குத் தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.
பேய் வடிவம் பூத வடிவம் கொண்டும் இறைவனை அடையலாம். பேய் என்னும் பூதம் கண்டு பயப்பட வேண்டாம் என்பதுதான் இக்கதை நமக்குச் சொல்லும் பாடம்! புளிய மரத்தடியில் இருந்தாலும் ஞானம் கிடைக்கும் பேய் பயம் கொள்ள வேண்டாம் என்பதை நமது மகான்களின் வாழ்க்கையும் அறிவுறுத்துகிறது!!
புளியை உணவில் அளவோடு சேர்த்துக் கொள்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. உணவுச் செரிமானத்தில் பெரும் பங்காற்றுவது வயிற்றில் உள்ள ஹைட்றோ க்ளோரிக் அமிலம். அமிலத் தன்மை செரித்தலுக்குச் செரிவூட்டுகிறது என்பதை உணர்ந்து அமிலத்தன்மை மிக்க புளியினை உணவில் பயன்படுத்தத் துவங்கியது மனித சமூகம்.
புளியில் உள்ள சைலோ க்ளூக்கன் ஓட்டும் தன்மையற்ற செல்லுலோஸ் மீது படரும் திறன் கொண்டது. எனவே சோற்றுப் பருக்கையில் எளிதில் படர்ந்து ஒட்டிக் கொள்வதால் இதனை உடைத்து பாக்டீரியாக்களால் பருக்கைகளை அணுக இயலாது. இதனால்தான் புளியம் சாதம் நீண்ட நாள் கெடுவதில்லை. புளியோதரை இறைவனுக்கு நேவேத்தியம் ஆகவும் படைக்கப்படுகிறது!
அதே சமயத்தில் புளி கொஞ்சம் அதிகமாக உணவில் சேர்க்கப்பட்டு அதனை நாம் ருசி பார்த்தால் நமது முகம் அஷ்ட கோணலுக்குப் போகும்!! அப்போது நம்மை நாம் கண்ணாடியில் பார்த்தால் “பேய் போல் தான் தெரிவோம்” என்கிறார் என்னுடைய பால்ய நண்பர் டபுள். யு. கே. சுப்பிரமணியம்!
புளியோதரை பிரசாதம் செய்முறை:கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக் கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பின்னர்
கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும். ஏற்கனவே ஊற வைத்த புளித் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்பு, தாளிப்பு இவைகளுடன் புளித்தண்ணீர், உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் பொடி சேர்த்து அந்தக் கலவையை
வடித்த சாதத்தின் மீது கொட்டி நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். சாதம் ரொம்ப குழையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். பகவானுக்கு படைக்கப்படும் இந்த பிரசாதத்தின் பெயரேபுளியோதரை தான்! புளிய மரத்தில் பேய்கள் வாசம் செய்தால் அந்தப் புளியினை நாம் பிரசாதத்தில் சேர்த்துக் கொள்வோமா? எனவே பேய் என்பது நமது மனதில் எழுகிற ஒரு அச்ச உணர்வு தான்!





