
தான் முன்னர் சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்துக்கும், தற்போது ‘யார் அந்த சார்?’ கேள்வியே அமுங்கிப் போயிருப்பதற்கும் விளக்கம் சொல்லி, அண்ணாமலை சில கேள்விகளை இன்று சமூகத் தளங்களில் முன்வைத்துள்ளார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் முறைகேட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய திமுக.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு இது தொடர்பில் குற்றவாளி என்று கூறி, 30 வருட சிறைத் தண்டனை அறிவித்தது மகளிர் நீதிமன்றம். மேலும், அது தொடர்பில் பேசிய அரசு வழக்குரைஞர், குற்றவாளி ஞானசேகரன் ஒருவர் மட்டும் தான் என்றும், இனி எவரும் யார் அந்த சார் என்பதைக் கேள்வியாக எழுப்பக் கூடாது என்றும், அவ்வாறு எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பில் சேரும் என்று ஊடகங்களில் கூறினார். இதுவே பலரது சந்தேகத்தைக் கிளறியது .
இந்நிலையில் பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சமூகத் தளங்களில் கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏறபடுத்தியுள்ளார். அதில் அவர் எழுப்பியுள்ள சில கேள்விகள், இந்த வழக்கின் முக்கியத்துவத்தையும், முறைகேடுகளையும் மீண்டும் மக்கள் மத்தியில் கேள்விகளாக எழுப்பியுள்ளது.
இது தொடர்பில் சிடிஆர் எனப்படும் தொலைபேசி அழைப்பு விவரங்களைக் குறிப்பிட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக 24.12.2024 அன்று இரவு ஞானசேகரன் காவல்துறையால் விடுவிக்கப்பட்ட பிறகு யார் யாரிடம் எல்லாம் ஞானசேகரன் பேசி இருக்கிறார் என்ற விவரங்களை ஆதாரத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
24ம் தேதி ஆதாரத்தை அழித்துள்ளார்கள்! கோட்டூர் சண்முகத்தையும், அமைச்சர் மா.சு.வையும் ஏன் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவில்லை? 24ம் தேதி இரவு 2 காவல்துறை அதிகாரிகள் FIR போடவேண்டாம் என மாணவியிடம் கெஞ்சியுள்ளனர் ஏன்? இது பற்றியெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்?
அண்ணா பல்கலையில் அதிகாரியாக வேலை பார்க்கும் நடராஜனும், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகமும், யாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த டிச.,23ம் தேதியுடன் தொடங்கும் 4 நாட்களில் மட்டும் 13 முறை பேசியுள்ளனர். டிச.,24ம் தேதி இரவு தான் முக்கியமான தினம். அன்று தான் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன என்று தனது வீடியோவில் அண்ணாமலை கூறுகிறார்.
மேலும், இந்த விஷயமாக அண்ணாமலை எழுப்பியிருக்கும் கேள்விகள் வழக்கோடு மிகவும் நெருக்கமாக சம்பந்தபட்டு இருக்கிறது என்பதால், எளிதில் கடந்து போக முடியாதபடி பின்னிப் பிணைந்து இருக்கின்றன என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
சம்பவம் நடந்ந 24.12.2024 அன்று இரவு ஞானசேகரனின் மொபைல் போன், ஏரோப்பிளேன் மோடில் இருந்து வெளியே வந்த பிறகு, ஞானசேகரன் பேசியிருக்கும் முதல் போன் ஒரு போலீஸ் அதிகாரியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு திமுக வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகத்தோடு பல முறை பேசி இருக்கிறார். மறுநாள் ஷண்முகம் சுகாதாரத்துறை அமைச்சரோடு பேசி இருக்கிறார்.
இந்த போன் உரையாடல்கள் பலமுறை நடந்த பிறகு 25.12.2024 இரவு அன்று ஞானசேகரன் மீண்டும் கைது செய்யப்படுகிறார். 24.12.2024 அன்று விடுவிக்கப்பட்ட பிறகு மீண்டும் 25.12.2024 வரை கைது செய்யப்படும் வரை இடைப்பட்ட 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?
வழக்கின் முதுகெலும்பான சம்பவம் நடந்த 24.12.2024 அன்று இரவு நடந்த நிகழ்வுகள் எல்லாம் முறையாக விசாரிக்கப்பட்டதா? ஞானசேகரனோடு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டார்களா?
இந்த நிகழ்வுகளை எல்லாம் தேதி, நேரம் வாரியாக ஆதாரத்துடன் விரிவாக சொல்லி கேள்விகள் கேட்கிறார் அண்ணாமலை.
மேலும், தான் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைச் சொல்லியே, அன்றைய நாளில் சாட்டையால் அடித்துக் கொண்டதாகவும், இப்போதும் அந்தக் கேள்விகள் பதிலெதுவும் தரப்படாமல் அப்படியே உள்ளதாகவும் குறிப்பிடும் அண்ணாமலை, மேலும் இரு நாட்கள் நேரம் கொடுப்பதாகவும், அதுவரை இதில் தொடர்புடைய காவல் அதிகாரிகளின் அடையாளங்களை வெளியிடப் போவதில்லை என்றும் குறிப்பிடுகிறார்.
பத்து வருடங்களுக்கு மேல் காவல் உயரதிகாரியாக பணி செய்த அனுபவம் இருப்பதால், ஒரு சாமான்யனின் பார்வையாகப் பார்க்காமல் ஒரு காவல் உயரதிகாரியின் பார்வையாகப் பார்த்து இந்தக் கேள்விகளை முன் வைக்கிறார்.
ஒரு நேர்மையான அரசாக இருந்தால் அண்ணாமலையின் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தார்மீக கடைமை அரசுக்கு இருக்கிறது என்றும், இது அண்ணாமலையின் கேள்விகள் மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதில் இருக்கும் கேள்விகள் என்றும் சமூகத் தளங்களில் பலரும் பதிவு செய்து வருகிறார்கள்.
அண்ணாமலையின் சமூகத் தளப் பதிவு:
https://twitter.com/annamalai_k/status/1929762481758728514
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில், திமுக நிர்வாகி ஞானசேகரனுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. #SaveOurGirls_NotYourSir எனினும், இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள், இன்னமும் எஞ்சியிருக்கின்றன. யாரை காப்பாற்றத் துடிக்கிறது இந்த திமுக அரசு? சில விடைகளும், பல கேள்விகளும்!





