“யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது.:
(ஸ்வரவரிகளை மாத்தி வாசிச்ச வீணை வித்வானுக்கு ஆசார்யா தந்த அட்வைஸ்!)

நன்றி-குமுதம் லைஃப்-
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகேஸ்வரன்,சனகாதி முனிவர்களுக்கு பாடம் கற்பிக்கறதுக்காக தட்சிணாமூர்த்தியா அவதாரம் பண்ணினார்ங்கறது எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.
அந்த சமயத்துல கல்லால மரத்துக்குக் கீழே அமர்ந்துண்டு வார்த்தைகளால் எதுவும் சொல்லாம வெறும் மௌனத்தாலாயே உபதேசம் பண்ணினார் தட்சிணாமூர்த்தி.
அந்த சர்வேஸ்வரனோட அம்சமாகவே போற்றப்படற பரமாசார்யா, ஒரு சமயம் ஆலமரத்துக்குக் கீழே அமர்ந்துண்டு வித்வான் ஒருத்தருக்கு ஞான உபதேசம் பண்ணின சம்பவம்தான் இப்போ பார்க்கப் போறது.
மகாபெரியவா ஒரு சமயம் மகாராஷ்டிர மாநிலத்துல இருக்கிற சதாராவுல தங்கி இருந்தார்.
அங்கே ஒரு ஆலமரத்துக்குக் கீழே தன்னோட இருக்கையை அமைக்கச் சொல்லி அங்கேதான் இருந்துண்டார்,ஆசார்யா. அவர் இளைப்பாறற சமயத்துல மரத்தோட வேர்ல தலையை வைச்சுப்படுத்துக் கொள்வார். முன்னால் திரைபோட்டிருக்கும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கற சமயத்துல மட்டும் திரையை விலக்குவார்கள். அப்படியே மரத்துக்கு கீழேயே அமர்ந்து தரிசனம் கொடுப்பார் ஆசார்யா.
அந்த சமயத்துல ஒருநாள், சென்னையில் இருந்து க்ஷேத்ராடனம் வந்திருந்த வீணை வித்வான் ஒருதர்,பெரியவா அங்கே இருக்கறதைத் தெரிஞ்சுண்டு, தன் நண்பரோட அங்கே வந்திருந்தார். பெரியவாளை தரிசனம் செய்ததும்,அவர் முன்னால உட்கார்ந்து கொஞ்சநேரம் வீணை வாசிக்க அனுமதி கேட்டார்.பரமாசார்யா சம்மதம் சொன்னதும்,வித்வான் வீணையை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சார்.
விதவிதமான ராகங்கள்ல அபூர்வமான கிருதிகளை எல்லாம் அவர் வாசிக்க வாசிக்க, அங்கே இருந்த பக்தர்கள் எல்லாரும் அந்த இசை மழையில் நனைஞ்சுண்டு இருந்தா.கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் வாசிச்சு முடிச்சுட்டு, வீணையை உறையில் வைச்சு மூடி கட்டப் போனார் வித்வான்.
அப்போ, பெரியவா “கொஞ்சம் பொறு.வீணையை மூடிவைக்காதே.அதை எங்கிட்டே குடு. நான் அதை வாசிக்கலாம் இல்லையா?” என்று கேட்டார்.
‘பெரியவா வீணை வாசிக்கப் போறாரா?’ என்று எல்லாருக்கும் திகைப்பு. வித்வான் உட்பட…! ஆனால் எதற்காக வாசிக்க இருக்கிறார் என்பது மட்டும் யாருக்கும் புரியவில்லை.
வீணையை வாங்கிண்ட ஆசார்யா,அதை ஸ்ருதி கூட்டி, லேசா மீட்டினார்.
வித்வான்கிட்டே..”நான் ஸ்ருதி கூட்டியிருக்கிறது சரியா இருக்கான்னு பாரு!” என்றார்.
“சரியா இருக்கு!”ன்னு சொல்லி வித்வான் ஆமோதிச்சு தலைய ஆட்ட,மறு கணமே வீணையை வாசிக்க ஆரம்பிச்சுட்டார் ஆசார்யா. ஒரு சில நிமிஷம் ஆகியிருக்கும்.
வீணை வாசிச்சுண்டு இருந்த பெரியவா முன்னால,சரணாகதி பண்றப்புல அப்படியே விழுந்தார்,வித்வான். எழுந்து நின்னு கன்னத்துல ‘பட் பட்னு போட்டுண்டு, “பெரியவா என்னை மன்னிக்கணும்! என்னை மன்னிக்கணும்!தப்பு பண்ணிட்டேன்ன்னு திரும்பத் திரும்பச் சொல்லிண்டே கதறி அழ ஆரம்பித்து விட்டார்.
வதனத்துல எந்த சலனத்தையும் காட்டாம, வாசிச்சுண்டு இருந்த கிருதியை முழுசாவாசிச்சு முடிச்சார்,மகாபெரியவா. பின் வீணையை அவரிடம் திருப்பிக்கொடுத்து,
“வித்யா கர்வம் ஒருத்தருக்கு இருக்கவே கூடாது, இனிமேலாவது கவனமா இரு!” அப்படின்னு சொல்லி ஆசிர்வாதம் செய்தார்.
என்ன நடக்கிறது.பரமாசார்யா திடீர்னு வீணை வாசிக்கறதா சொல்லி வாசித்தது ஏன்? இப்போ வித்வானுக்கு அட்வைஸ் செஞ்சது ஏன்? இதெல்லாம் அங்கே இருந்தவா யாருக்குமே புரியலை.வித்வான் கூட வந்திருந்த அவரோட நண்பருக்கோ என்ன நடக்கறதுன்னே புரியலை.
“இங்கே என்ன நடந்தது? நீ தப்பு பண்ணிட்டதா கதறி அழுதே! ஆசார்யா அட்வைஸ் பண்ணினார். அப்படி என்னதான் தப்பு பண்ணினே” — வித்வானிடம் நண்பர்.
“என்னோட வாசிப்பை எல்லாரும் ரசிச்சா இல்லையா? அதைப் பார்த்ததும் எனக்கு கொஞ்சம் கர்வமா இருந்தது. ராவணன் சாமகானம் வாசிச்சு ஈஸ்வரனையே மயக்கினமாதிரி, நாமளும் சாமகானத்துல இசைச்சு எல்லாரையும் மயக்கிடணும்னு நினைச்சு, அந்த ராகத்துல
ஒரு கிருதியை வாசிக்க ஆரம்பிச்சேன் .தொடங்கிட்டேனே தவிர, பாதியில அதுக்கான ஸ்வரங்கள் மறந்து போயிடுத்து. மாத்தி வாசிச்சா யாருக்குத் தெரியப் போறதுன்னு நினைச்சு, வேற ஸ்வரவரிகளை வாசிச்சு எப்படியோ ஒருவழியா நிறைவு செஞ்சுட்டேன்.மத்தவா யாரும் இதை தெரிஞ்சுக்கலைன்னதும் ரொம்பவே சாமர்த்தியமா வாசிச்சுட்டதா மனசுக்குள்ளே கர்வப்பட்டுண்டேன்.
மகாபெரியவா நான் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சுட்டதோட, வீணையை வாங்கி,நான் எந்த இடத்துல ஸ்வரத்தை மாத்தி வாசிச்சேனோ அந்த பகுதியில வரவேண்டிய சரியான ஸ்வரத்தை கொஞ்சமும் பிசகாம வாசிச்சு நிறைவு செய்தார்.
ஆசார்யா ஸர்வக்ஞர்.அவருக்கு எல்லாம் தெரியும்கறதை மறந்து,யாருக்குத் தெரியப்போறதுன்னு நினைச்சு,தப்பா வாசிச்சதோட இல்லாம,மாத்தி,மாத்தி வாசிச்சு, வித்யைக்கே அபச்சாரம் பண்ணிட்டேன். அதனாலதான் மகாபெரியவாகிட்டே மன்னிப்பு கேட்டேன்!” அப்படின்னார் வித்வான்.
வீணை வித்வானுக்கு மட்டுமல்ல. யாரா இருந்தாலும் கல்வியோ,கலையோ எதுல சிறந்தவராக இருந்தாலும், எந்த சமயத்துலயும் வித்யா கர்வம் மட்டும் கூடாது. அது இருந்தா கத்துண்ட கலையே மறந்திடும்.அப்படின்னு ஆலமரத்துக்குக் கீழே உட்கார்ந்து ஆசார்யா நடத்தின பாடம் அங்கே இருந்த எல்லாருக்கும் பரிபூரணமா புரிஞ்சுது.



