ஐ.எஸ்., பயங்கரவாத தொடர்பு! சென்னை, நாகையில் பிடிபட்டவர்களிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர் விசாரணை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

nia - 2026

நாகை, சிக்கல் பகுதியைச் சேர்ந்த அசன்அலி, மஞ்சகொல்லை ஆரிப் முகமது ஆகிய இருவரிடம் நாகையில் விசாரணை நடத்திய நிலையில் என்ஐஏ., அதிகாரிகள் அவர்களை சென்னை அழைத்து வருகின்றனர். இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இருவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நாகையில் மேலும் ஒருவரிடம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நாகை மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த தௌபிக் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று காலை முதல் தமிழகத்தில் மண்ணடி பகுதியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த முகமது யூசுப்தீன், சையது புகாரி, ஹசன் அலி ஆகியோர் மீது தேசிய 5 பிரிவுகளின் கீழ் தேசிய புலானய்வு முகமை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்கள் மூவரும், இந்தியாவில் சதிவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாகவும், பயங்கரவாத குழுவை உருவாக்க முயற்சி செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவ நிதியும் திரட்டி கொடுப்பதாக அவர்கள் மீது என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்துள்ளது.

இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்தியது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்திய
பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்புள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்தது. இதன் அடிப்படையில், கேரளாவிலும் தமிழகத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பலரைக் கைது செய்தனர். பலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

nia questioned 3 chennai - 2026இந்நிலையில் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் இருந்து நேற்று சென்னை வந்த என்ஐஏ அதிகாரிகள் குழு, மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இதேபோல் புரசைவாக்கத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பின் மாநில தலைவர் முகமது புகாரி
வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், கேரளாவில்
கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்
அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மஞ்சகொல்லை, சிக்கல் ஆகிய இடங்களில் அசன் அலி, ஹாரீஸ் முகமது ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற சோதனைகள் தொடர்பாக அசன் அலி என்பவரிடம் சென்னை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. சோதனை நடைபெற்ற இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.