இஸ்லாமியர்களுடன் ஸ்டாலின் தேர்தல் ஆலோசனை; சீல் வைக்கப்பட்ட திருமண மண்டபம்; நீதிமன்றம் விசாரணை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

stalin duraimurugan - 2026
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  ஆம்பரில் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம்  நடத்தினார். இதற்கான அனுமதி பெறாமல் கூட்டம்  நடத்தியதாக அ.தி.மு.க., வினர் புகார் தெரிவித்தனர்.  இதனையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்  விசாரித்து உறுதி செய்தனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின்,  வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் நகர
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஆம்பூர் அடுத்த மோட்டுக்கொல்லை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்ட, இஸ்லாமியர்களுக்கு இடையிலான மத ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஸ்டாலின், இஸ்லாமியர்கள் மத்தியில் பேசி, திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.

ஆனால், உரிய அனுமதி பெறாமல் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஆம்பூர் தேர்தல் அலுவலர் சுஜாதா தலைமையிலான அலுவலர்கள், ஸ்டாலின் தலைமையிலான கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை அங்கே நடத்த இடம் அளித்ததால், மண்டபத்திற்கு சீல் வைக்கப் பட்டதாக தேர்தல் அலுவலர் சுஜாதா விளக்கமளித்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற நிலையில்தான் திமுகவினரின் கூட்டம் குறித்த தகவல் கிடைத்தது. அங்கிருந்து வருவதற்குள் கூட்டம் முடிந்து விட்டது என்று கூறினார்.

இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில் மண்டபத்திற்கு எந்த முன் அறிவிப்புமின்றி சீல்வைக்கப்பட்டுள்ளதால், திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக சீலை அகற்ற உத்தரவிடுமாறும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை பிற்பகலில் விசாரிப்பதாகக் கூறினர்.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி, ஆம்பூரில் இஸ்லாமிய அமைப்பினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திய தனியார் மண்டபத்திற்கு சீல் வைப்பு சரியான நடவடிக்கை! மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சந்தித்து வாக்குகள் கேட்பது மதவாத அரசியல் தான். #மதவாததிமுக வை தோற்கடிப்போம்… என்றார்.

இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலித்தது. இது குறித்து, வேலூர் இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆம்பூரில் இசுலாமிய வாக்காளர்களை ஸ்டாலின் சந்தித்த மண்டபத்திற்கு தேர்தல் ஆணையம் பூட்டு போட்டுள்ளது. இன்னும் எத்தனை தேர்தலை சந்தித்தபின் தேர்தல் விதிகளை கற்றுக் கொள்வீர்கள் ஸ்டாலின் என்று விவசாயி க ஜெயராமன் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.