அமெரிக்காவில் வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் பரிதாப மரணம்

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

us gunman texas 20 died - 2026அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில், வால்மார்ட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஷாப்பிங் மாலில் இருந்த பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தில் 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எல் பாசோ (El Paso) என்ற இடத்தில் வால்மார்ட் வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி 10.39க்கு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஆறு நிமிடங்களில் போலீஸார் அந்தப் பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.

wallmart gunshoot us - 2026இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வால்மார்ட்டில் வந்த வாடிக்கையாளர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

துப்பாக்கியால் சுட்டவன் ஒருவன் மட்டும் இல்லை.. மேலும் ஓரிருவர் இணைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என்று போலீஸார் கூறுகின்றனர். இது தொடர்பில் ஒருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

el paso gun shoot - 2026துப்பாக்கிச்சூடு நடந்துள்ள, அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள சியல்லா விஸ்டோ மாலுக்கு அருகில் உள்ள வால்மார்ட் ஸ்டோரை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ள போலீஸார், 21 வயதுடைய ஓர் இளைஞரைப் பிடித்து வைத்து விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

போலீஸார் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த நபர், எல் பாஸோ பகுதியில் இருந்து 1,046 கி.மீ., தொலைவில் இருக்கும் டல்லாஸ் பகுதியின் அல்லேன் நகரைச் சேர்ந்தவர் என்றும், 21 வயதான பேட்ரிக் குருசீஸ் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளில், கறுப்பு டீசர்ட் அணிந்து, காதில் காற்று மாசு ஒலி தடுப்பை மாட்டிக் கொண்டு, மிகவும் சாதாரணமாக ஒரு துப்பாக்கியை கையில் பிடித்துக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெக்சாஸ் மாகாண ஆளுநர் க்ரேக் அப்போட், டெக்சாஸ் வரலாற்றில் மிக மோசமான துயர நாள் இது என்று கூறியுள்ளார்.

இது ஒரு கோழைத்தனமான செயல் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், நாட்டின் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இருப்பதாகவும், இந்தக் கோழைத்தன செயலை கண்டிப்பதாகவும், அப்பாவிகளைக் கொல்வதை எதனைக் கொண்டும் நியாயப் படுத்திவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் மெக்ஸிகோவைச் சேர்ந்த மூவர் உயிரிழந்திருப்பதாக மெக்ஸிகோ அதிபர் மானுல் லோபெஸ் ஒப்ரேடார் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது என்றும், இன்னும் உயிரிழந்தார்களின் அடையாளம் உறுதிப் படுத்தப் படவில்லை என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம்தான் கலிபோர்னியா உணவுத் திருவிழாவில் ஒரு வளரிளம் பருவ இளைஞர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். அந்தச் சம்பவம் நடந்து ஒரு வார காலத்துக்குள் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது அமெரிக்க வரலாற்றில் துரதிருஷ்டமான ஒன்றாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.