கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

Published:

dharmendra pradhan main 1 - 2026

— ஆர். வி. ஆர்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

இந்த 2026-ல் மருத்துவச் சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன், நீட் வினாத்தாள் முன்னதாகவே கசிந்தது என்று தேசியத் தேர்வு முகமை கண்டறிந்தது. உடனே அது பற்றி மத்தியக் கல்வி அமைச்சகம் புகாரளித்து சி.பி.ஐ வழக்குப் பதிந்தது. நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்தது. மறுதேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடக்கப் போகிறது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கு எதிராக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னணியில் நின்று, மற்ற சில அமைப்புகளும் இணைந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் வீதிப் போராட்டம் நடத்துகின்றன. அவற்றின் கோரிக்கை: வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும். ஆனால் அவரோ பிரதமர் மோடியா அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. பின்னாளில் அவர்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று நமக்குத் தெரியாது.

நீட் வினாத்தாள் கசிவைப் புலன்விசாரணை செய்யும் சி.பி.ஐ, 13 நபர்களைக் கைது செய்திருக்கிறது. வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த ஒரு கெமிஸ்ட்ரி புரொபசர் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு வினாத்தாளைக் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருக்கிறது. அதாவது, வினாத்தாள் கசிவு லஞ்சத்திற்காக நடைபெற்றது என்பது புலன்விசாரணையில் தெரியவருகிறது. வழக்கு நடக்கும்.

இப்போது போராட்டத்திற்கு வருவோம். போராட்டக்காரர்கள் மத்தியக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இது புரிவதற்கு, நாம் சில அடிப்படை விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இந்தியாவில் லஞ்ச ஊழல் ஒரு வாழ்க்கை முறை என்றாகி விட்டது. அரசு உயர் மட்டத்தில் லஞ்ச ஊழல் பலப்பல வருடங்களாகப் பரவி விட்டது. அதன் விளைவாக, கீழ் மட்டத்தில் லஞ்ச ஊழல் நர்த்தனம் ஆடுகிறது.

லஞ்சம் தருகிறவர்கள் இருவகை. ஒன்று, லஞ்சம் கொடுத்துத் தாங்கள் நேர்வழியில் பெறமுடியாத சலுகைகளையும் பலன்களையும் பெற்று அதன்மூலம் தாங்கள் அளித்த லஞ்சப் பணத்தைவிட அதிகப் பயன் அடைகிறவர்கள். நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் கொடுத்தவர்கள் இந்த வகை.

இன்னொரு வகையினர், அரசு அளிக்கும் சேவைகள் மற்றும் பலன்களைப் பெறுவதற்காக லஞ்சம் தரும் கட்டாயத்துக்கு உள்ளாகிப் பணம் இழக்கிறவர்கள். உதாரணம்: பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறையாக ஒரு விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக, லஞ்சம் கொடுக்க வேண்டிய பொதுமக்கள்.

இந்தியாவில் மத்தியிலோ ஒரு மாநிலத்திலோ, எந்த அரசு இருந்தாலும் முறைகேடான பயன்களுக்காக லஞ்சம் தருபவர்களும், அதிக வருமானத்திற்காக லஞ்சம் வாங்கும் அரசுத்துறை மனிதர்களும் கைகோர்ப்பது அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும். இதற்குக் காரணம், இரு பக்கத்திலுமான ஒழுக்கக் குறைவு. ஒரு நேரான அரசு கவனிப்பாக இருந்து அவர்களின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம், ஆனால் அவற்றை முற்றிலும் ஒழிக்க முடியாது. காரணம்: தனிமனித மனங்களில் உள்ள ஒழுக்கக் குறைவை ஒரேயடியாக எந்த அரசும் களைய முடியாது. அந்த மனிதர்கள் அரசுக் காரியங்களில் தங்கள் கைவரிசையைக் காட்டும்போது, ஒரு பொறுப்பான அரசு அவர்களைப் பிடித்து வழக்கு நடத்தி அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம், அவர்கள் எதிர்பார்த்திராத சமூக அவமானத்தை அவர்களுக்குத் தரலாம் – அதன் மூலம் பின்னர் அதே குற்றத்தைச் செய்ய நினைப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்த முனையலாம். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அரசு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

சரி, தொன்றுதொட்ட நாளிலிருந்து இந்தியா தனிமனித ஒழுக்கக் குறைவுள்ள சமூகமா? இல்லை. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் இதிகாசங்களையும் புராணங்களையும் போதனைகளையும் கொண்ட நாடு இந்தியா. அந்நியர்கள் ஆட்சியின்போது, அவர்களது ஆட்சியே அக்கிரமம், அநியாயம் என்றிருந்து அதனால் இந்தியப் பொதுவாழ்வில் ஒழுக்கக் குறைவு துளிர்த்துப் பரவியது. அதில் அகப்பட்டவர்கள் அதிகம், தப்பித்தவர்கள் குறைவு.

மத்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர்கள், அதை வழி நடத்துபவர்கள், அதை ஆதரிக்கும் எதிர்க் கட்சிகள் மற்றும் பொதுவாழ்வுப் பிரபலங்கள் ஆகியோருக்கு, ஒரு அடிப்படை விஷயம் புரியாதா? அதாவது, நீட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் துளியும் காரணமல்ல; அதற்குக் காரணம் நீட் வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சிலரும், தேர்வுக்கு முன்னதாக அந்த வினாத்தாளை அறிய முற்பட்ட சில மாணவர்களும், அவர்கள் அனைவரிடம் இருந்த ஒழுக்கக் குறைவும் என்ற அடிப்படை விஷயம் புரியாதா?

புரியும். நன்றாகப் புரியும். இருந்தாலும் போராட்டத்தை நடத்துபவர்கள், அவர்களோடு இணையும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டத்தை ஆதரிக்கும் பிரபலங்களிடம் ஒரு குறை இருப்பதால் அவர்கள் தங்களின் அநியாயச் செயலில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அந்தக் குறை: அவர்களிடமும் உள்ள ஒழுக்கக் குறைவு – ஒரு பேருக்காக, வெளிச்சமும் விளம்பரமும் கிடைப்பதற்காக, அரசியல் ஆதாயத்திற்காக, உண்மையை ஏற்க மறுக்கும் ஒழுக்கக் குறைவு. அந்த ஒழுக்கக் குறைவையும் அரசால் நீக்க முடியாது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு என்ன செய்யலாம்?

ஒழுக்கக் குறைவான நோக்கத்துடன் வீதியில் போராட்டம் நடத்துகின்ற, ஒழுக்கக் குறைவுடன் அதற்கு ஆதரவு தருகின்ற, மனிதர்களின் செயல், நீட் வினாத்தாள் கசிவிற்காக லஞ்சம் வாங்குவது மாதிரியான பெரிய குற்றம் அல்ல. தெருக்களில் இறங்கி அவர்கள் செய்யவிருந்த போராட்டத்தை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால், மத்திய அரசுக்கு மக்கள் மத்தியிலும் கோர்ட்டுகள் பார்வையிலும் கெட்ட பெயர் ஏற்படலாம் – ஏதோ நீட் வினாத்தாள் கசிய விட்டவர்களுக்கு ஆதரவாக மத்திய அரசு நடப்பதாகப் பொதுவெளியில் ஒரு தோற்றம் ஏற்படலாம். அதனால் எதிர்க் கட்சிகளின் கையும் ஓங்கலாம். யார் கண்டது, இந்தியாவுக்கு எதிரான சில வெளிநாட்டு சக்திகளும் வலிமை பெறலாம். ஆகவே போராட்டத்தை அரசு கடுமையாகக் கையாளாமல் இருந்தது விவேகம் மிக்கது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

போராட்டம் தொடர்பான மனிதர்கள் தங்களை, தங்களின் போலி அக்கறையை, மேலும் மேலும் வெளிக்காட்டிக் கொள்ளச் செய்து, பொதுவெளியில் அவர்கள் செய்யத் துடிக்கும் அராஜகங்களையும் சிறிய அளவில் அனுமதித்து, மதியூகமாகவும் பொறுமையாகவும் அவர்களை அம்பலப்படுத்தி வலுவிழக்கச் செய்வதுதான் மத்திய அரசு செய்யத் தகுந்தது. அதை மத்திய அரசு செய்து வருகிறது. அதைச் செய்வதில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சமர்த்தர்கள் அல்லவா?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Email: veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com

Related articles

Recent articles

spot_img