கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

Published:

dharmendra pradhan main 1 - 2026

— ஆர். வி. ஆர் —

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வழியாக ராஜினாமா செய்துவிட்டார்.

2026 இளநிலை மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வு நடந்தது. ஆனால் தேர்வுக்கு முன்னரே அதற்கான வினாத்தாள் கசிந்துவிட்டது என்பதை மத்திய அரசு பின்னர் அறிந்தது. அந்தத் தேர்வு உடனே ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடந்து அதன் முடிவுகள் வெளியாகி மருத்துவச் சேர்க்கைகள் நடக்கப் போகின்றன. பிறகென்ன என்றால் – இருக்கிறது.

முதலில் நடந்த தேர்வின் வினாத்தாள் கசிந்தது என்பதால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு முன்னணியில் நின்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி அமைச்சரின் ராஜினாமாவைக் கோரி 37 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. முதலில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்காவிட்டாலும், இறுதியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். ஜந்தர் மந்தர் போராட்டமும் வாபஸ் ஆகிவிட்டது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

விவேகம் என்றால் என்ன? ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக் கொண்டால் உங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு மேலும் சங்கடம் தரும் முடிவை எடுக்காமல், ஒரு பாதுகாப்பான முடிவை எடுத்து அந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு விவேகம் என்று அர்த்தம். அதன் பெயர் தோல்வி அல்ல. அது உங்களுக்கான வெற்றி – மற்றவர்களுக்கு எப்படி இருந்தாலும்.

நீட் வினாத்தாள் கசிந்ததற்கு தர்மேந்திர பிரதான் ஒரு நேரடியான காரணம், அவர் தன்னுடைய அல்லது தனக்கு வேண்டியவர்களின் லாபத்திற்காக உடந்தையாக இருந்து அந்த வினாத்தாள் கசிய உதவினார் என்பது உண்மையானால், ஒரு அகப்பட்ட குற்றவாளியாக அவர் ராஜினாமா செய்யவேண்டும்; மறுத்தால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் விடுவிக்க வேண்டும். அப்படியான குற்றச்சாட்டு தர்மேந்திர பிரதான் மீது இல்லை, அதற்கான சாட்சியம் இருப்பதாக யாரும் சொல்லவில்லை. பிறகு ஏன் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யவேண்டும், அது ஏன் மத்திய அரசின் விவேகம் என்றாகும்?

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

டெல்லி போராட்டக்களப் பகுதியில் குவிந்தவர்களில் அநேகர் மாணவர்களாகத் தெரியவில்லை. அவர்களில் வெகுசிலர் மாணவர்களாக இருக்கலாம். கரப்பான்பூச்சியினர் இருந்தார்கள். அதோடு, மத்திய அரசை எதிர்த்துக் குரல் கொடுப்பதற்கு அது லட்டு மாதிரியான வாய்ப்பு என்பதால் காங்கிரஸ் கட்சியினர், ஆம் ஆத்மி கட்சியினர், இன்னும் சில கட்சியினர் அங்கு திரண்டிருந்தனர்.

ஜந்தர் மந்தரில் போராட வந்தவர்கள் கைகட்டி வாய்பொத்தி காந்திய வழியில் போராடுபவர்கள் அல்ல. அதோடு, பொதுவெளியில் கூட்டம் எங்கு எதற்காகக் கூடினாலும் வந்து சேரும் சமூக விரோதிகளும் அங்கு கலந்திருப்பார்கள். இந்தியாவை வீழ்த்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகள் அந்தக்கூட்டத்தில் சிலரை அனுப்பி வைத்திருக்கலாம். வேடிக்கை பார்க்கச் சில அப்பாவி மக்களும் அங்கு வந்திருப்பார்கள். அந்த எல்லா மனிதர்களிலும் யார் யாரை என்ன செய்யத் தூண்டுவார்கள், எப்போது என்ன உயிர்ச்சேதம் அல்லது விபரீதம் அவர்களாலேயே ஏற்படுத்தப் படும் அல்லது தூண்டப்படும் என்பதைக் கணிக்க முடியாது. போராட்டக்களமும் டெல்லியில், நமது தலைநகரில், அகில இந்தியாவின் கவனத்தைப் பெறுகின்றதாக இருந்தது.

ஒரு தீக்குளிப்பு, ஒரு கொலை, பெரிய கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூடு என்று போராட்டக் களத்தில் ஏற்பட்டால் என்ன ஆகும்? அது கரப்பான்பூச்சிகளால், எதிர்க் கட்சிகளால், மீடியாவால், ஊதிப் பெரிதாக்கப்படும். அது சாதாரண இந்திய மக்களைப் பாதித்து மத்திய அரசுக்கு எதிராக அவர்களைத் திருப்பும். காரணம், சாதாரண இந்திய மக்கள் அறிவைவிட உணர்ச்சிகளால் அதிகம் உந்தப் படுகிறார்கள். ஒரு விஷயத்தின் நியாய அநியாயங்களை விடவும், அது தொடர்பான கூக்குரல், களேபரம், அடிதடி, ரத்தம், உயிரிழப்பு, ஆகியவை அவர்களை அதிகம் பாதிக்கும், அதன்படி அவர்கள் பெரிதும் வழி நடத்தப்படுவார்கள். இந்த விளைவுகள் ஏற்பட அனுமதித்து, ஒரு கல்வி அமைச்சரின் பதவியைத் தக்கவைத்து, வரப்போகும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் – அடுத்த எட்டு மாதங்களில் உத்தரப் பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் வருகின்றன – பாஜக கூட்டணி தனது வெற்றி வாய்ப்பைத் தவறவிடக் கூடாது. பத்து ரூபாய் நஷ்டத்தை ஏற்கச் சம்மதிக்காமல், நூறு ரூபாய் இழப்பை பாஜக வரவழைக்கக் கூடாது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

கூட்டிக் கழித்துப் பார்த்தால், மத்திய அரசு தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கேட்டுக் கொண்டது, அவரும் ஒரு பெரிய நன்மைக்காக அதற்கு உடன்பட்டது, மத்திய அரசின் தோல்வி அல்ல. அது மத்திய அரசின், பாஜக-வின், விவேகமான காரியம்.

இன்னொன்று. ஜந்தர் மந்தர் போராட்டம் ஜனநாயகத்தின் வெற்றி என்று சொல்வதும் சரியல்ல. மெஜாரிட்டி மக்களின் தீர்ப்பு, அல்லது அம்மக்களின் விருப்பம், என்பதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து மறுதேர்வு நடந்த சில நாட்களில் லோக்சபாவுக்குத் தேர்தல் நடந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது கரப்பான்பூச்சி கட்சியோ மற்ற எதிர்க்கட்சிகளோ அந்த வினாத்தாள் கசிவு பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மக்களிடம் பிரசாரம் செய்து அந்த லோக் சபா தேர்தலில் வென்றிருக்க முடியுமா? இல்லை, அது நடந்திருக்காது, என்பது ஒரு நல்ல அனுமானம். கரப்பான்பூச்சி கட்சியின் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி என்பது கண்சிமிட்டிச் சொல்லும் கருத்து. இருந்தாலும், கல்வி மற்றும் கல்வித்தரம் தொடர்பாக மேலும் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு இனி நினைத்துப் பார்ப்பது சற்று எளிதாகும்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது யாருக்காவது பெரிய இழப்பு, எதிர்பாராத தோல்வி, என்றால் அது லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்குத்தான். போராட்டம் நீடித்து அதில் ஏதாவது நிகழ்ந்து, அதனால் மக்கள் மத்தியில் பாஜக பெரிய பின்னடைவைச் சந்திக்கும், அதன் விளைவாக நாம் மக்களிடையே அதிக வெளிச்சம் பெறலாம் என்று நினைத்த ஒருவரின் எண்ணத்தில் மண் விழுந்தால், அதை அவர் தன்னளவில் எப்படி எடுத்துக் கொள்வார்? மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றா, அல்லது தனது நப்பாசைக்குக் கிடைத்த தோல்வி என்றா?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Email: veera.rvr@gmail.com
Blog: https://rvr-india.blogspot.com

Related articles

Recent articles

spot_img