கோயிலுக்கு வரும் கூட்டம்… எத்தகையது?! சமாளிப்பது எப்படி?!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

athivarathar crowd1 - 2026

விளையாட்டுப் போட்டிகள், அரசியல் கூட்டங்கள் இவற்றுக்கு வரும் கூட்டத்தை சமாளிப்பது எளிது. அதற்கான முக்கிய காரணம் அவை நடக்கும் நவீன அரங்கங்கள், மைதானங்கள் மற்றும் மேடை அமைப்பு. அதோடு அவற்றில் கோவில்களைப் போல் பக்கத்தில் சென்று தரிசிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.
கோவில்களில் இந்த அம்சங்கள் அனைத்துமே நேர்மாறாக இருக்கும். அதனால் கூட்ட நெரிசல் ஒரு பெரிய பிரச்னையாகவே இருக்கும்.

பழங்கால பாரம்பரிய கோவில்கள் பெரிதும் நான்கு வீதிகளில் வசிக்கும் நபர்களுக்கானவையாகவே இருக்கும். கொஞ்சம் பிரபலமான கோவில் அல்லது விசேஷ நாட்கள் என்றால் கூடுதல் ஆட்கள் வரக்கூடும். ஆனால், போக்குவரத்து வசதிகள் குறைவு என்பதால் அந்தக் கூட்டமும் பெரிதாக இருக்காது. அல்லது அவற்றைச் சமாளிக்கும் வழிகள் உருவாகி நிலைபெற்றிருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கோவில்களுக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அந்தக் கோவில்களால் தாங்க முடியாததாகவே இருக்கிறது. நூறு பேர் நிதானமாக தரிசிக்க முடிந்த ஒரு கோவிலில் பத்தாயிரம் பேர் வந்தால் வரிசையில் மணிக்கணக்காகக் காத்து நிற்கத்தான் வேண்டிவரும். ஐந்து விநாடிதான் தரிசிக்கவும் முடியும்.

பாரம்பரியக் கோவில்கள் பிரமாண்டமானவைதான். ஆனால், கருவறைகள் எளிய கூட்டத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கட்டப்பட்டவை. மூன்று பக்கம் மூடப்பட்டிருக்கும். நேருக்கு நேராகவும் கூட 20-30 பேர் மட்டுமே நின்று தரிசிக்க முடியும்.

கருவறையில் சில மாற்றங்களைச் செய்தால் கூடுதல் பக்தர்கள் ஒரே நேரத்தில் தரிசிக்க வழி பிறக்கும். ஆனால், எதிலும் எந்தவொரு மாற்றமும் செய்ய ஆகமங்கள், சாஸ்திரங்கள் இடம் கொடுக்காது. எனவே, கோவிலும் கருவறையும் இப்படித்தான் இருக்கும். கூட்டம் அதிகம் வந்தால் இப்படியான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.

அதிலும் அற நிலையத்துறைக்கு பக்தர்கள் மேல் அக்கறையும் முன்கூட்டித் திட்டமிடும் அறிவும் கிடையாதென்பதால் இந்தக் கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.

எனவே, எவ்வளவு நேரம் காத்திருக்க நேருகிறதோ அவ்வளவு நேரம் இறைவன் அவருடைய அரண்மனையில் நம்மை இருக்கவைக்கப் ப்ரியப்படுகிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டும். அத்தனை நேரம் அவரைத்தவிர வேறு யாரையும் எதையும் நினைக்காமல் இருக்கக் கிடைத்த வாய்ப்பு என்று அதை எடுத்துக்கொள்ளவேண்டும். எவ்வளவு கூட்டம் வருகிறதோ அவ்வளவு நம் தர்மத்துக்கு அபாயம் குறைவு என்று நினைக்கவேண்டும்.

பக்தர் கூட்டத்தை நிச்சயம் நெறிப்படுத்தவும் சிரமங்களை குறைக்கவும் முடியும்தான். ஆனால், அறநிலையத்துறையை அரசாங்கத்திடமும், அதிகாரத்தை திமுகவிடமும் கொடுத்துவிட்டு அதை எதிர்பார்க்கக்கூடாது.
அதோடு வர்க்கரீதியான அரசியல்-பிரபலங்கள் மூலமான அதிகார துஷ்பிரயோகத்தை நாம் உள்ளூர ஏற்றுக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு இது மாற வழியில்லை.

எனவே, எம்.பி.3பிளேயர்- இயர்ஃபோன் எடுத்துக்கொண்டு அதில் மனதுக்குப் பிடித்த மந்திரத்தை இடைவிடாது ஒலிக்கும்படி வைத்துக்கொண்டு நிம்மதியாக ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வரவும்.

  • பி.ஆர்.மஹாதேவன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.