இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

கல்வி சற்றுமுன் தமிழகம்

11 May15 plus two - 2026பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள முகவரிகள், விடைத்தாள் நகல் பெறும் முறை, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பிக்கும் முறைகள் அரசுத் தேர்வுகள் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றைப் பதிவிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் சமர்ப்பித்த டிக்ளரேஷன் ஃபார்ம் எனும் உறுதிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் முடிவுகள் 2 நிமிடங்களில் பள்ளிக் கல்வித்துறையால் அனுப்பப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி திங்களன்று பிற்பகல் முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலோ, www.tnresults.nic.in என்ற இணையதளத்திலோ தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக வரும் 17-ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 19-ஆம் தேதி சனிக்கிழமை வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் தேவையா, விடைத்தாள் நகல் தேவையா என்பதை முன்பே தெளிவாக முடிவு செய்து விண்ணப்பிக்குமாறும் அரசுத் தேர்வுகள் துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும். விடைத்தாள் நகல் பெற மொழிப்பாடத்துக்கு தலா 550 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு தலா இரு தாள்கள் கொண்ட பாடங்களான மொழிப்பாடங்கள், மற்றும் உயிரியல் பாடங்களுக்கு 305 ரூபாயும், ஒரு தாள்கள் மட்டுமே கொண்ட பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். இணையதளத்தில் நகல் பெற அதற்கான ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்ச்சி பெறாத அல்லது வருகை தராத மாணவர்களுக்கான மறுதேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.