ஏப்ரல் 20, 2021, 3:51 மணி செவ்வாய்க்கிழமை
More

  விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி 25)

  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படிவழியாக அமைந்த நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து இறைவனை அடையலாம்.

  manakkula vinayakar

  விநாயகர் நான்மணிமாலை – பகுதி 25
  விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

  நேற்று நாம் பார்த்த பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலையில்

                           தேவ தேவா!
  ஞானாகா சத்து நடுவே நின்று நான்
  பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
  விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10

  சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
  இன்புற்று வாழ்க என்பேன்!

  என்ற வரிகளில் பாரதியார் ஞானாகாசம் பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த ‘ஞானாகாசம்’ என்றால் என்ன? என்பதைக் கான்போம்.

  சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப் படிவழியாக அமைந்த நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து இறைவனை அடையலாம். இதில் சரியை என்பது உழவாரப்பணி முதலாக இறைவன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் செய்யும் தொண்டு. அதோடு அவனடியார்களை அன்பாக உபசரிப்பதும் ஆகும். பெரிய புராணத்தில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதன் மூலமே இறையருளைப் பெற்ற எண்ணற்ற நாயன்மார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

  அடுத்து கிரியை எனப்படுவது, உள்ளத்தாலும் புறத்தாலும் பூஜிப்பது.

  நெஞ்சகமே கோயில்
  நினைவே சுகந்தம்
  அன்பே மஞ்சன நீர்
  பூசை கொள்ள வாராய் பராபரமே  

  என்னும் தாயுமானவர் வழியில் பூஜிப்பது கிரியை ஆகும். இறைவனை ஒருமுகப்படுத்தி வழிபடும் நிலை யோகம். புலன்களின் வழியாக வேறு எந்த சிந்தனைகளும் நமக்குள் தோன்றாதவாறு, நாம், இறைவனாகிய பரம்பொருளை தியானிக்கிறோம் என்னும் வேறுபாடு மறைந்து, நாமும் தியானமும் இரண்டறக் கலக்கும் நிலையே யோகம்.

  இறைவனைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தெரிவிக்கும் நூல்களைக் கற்று பெரியவர்களின் உபதேசங்களைப் பெற்று இறைவனின் அருளைப் பெறுவதற்கான ஞானத்தைப் பெறுவது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் இந்த நான்கு வழிகளின் மூலமாக இறைவனின் அருள் கிடைக்கும்.

  இறைவனின் அடியார்களைப் போற்றி அவனது ஆலயங்களில் செய்யும் தொண்டால், சாலோகம் (இறைவனின் உலகம்), உள்ளும் புறமும் பூஜிப்பதால் சாமீபம் (இறைவனுக்கு அருகில் இருத்தல்), பரிபூரண யோகத்தால் சாரூபம் (இறைவனின் உருவம்) கிடைக்கும். இறைவனின் சிந்தனையை ஞானத்தில் தேக்கி இருப்பதால் முக்தி எனும் பலன் கிடைக்கும்.

  இறைவனின் உள்ளொளி ‘அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்கின்ற நான்கு இடத்திலும் உள்ளது. அதாவது பிண்டத்தில் அகம் ஆன்மா. ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம அறிவு. பிண்டத்தில் அகப்புறம் ஜீவன். ஒரு பொருளின் பயனை அறிந்த அறிவே ஜீவ அறிவு. ஒரு பொருளின் பெயரையும் குணம், குற்றங்களையும் அறிதல் கரணமாய மனஅறிவு. பிண்டத்தில் புறப்புறம், கண் முதலிய இந்திரியங்கள். ஒரு பொருளினது, நாம, தோற்ற குண, குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்தரியக்காட்சி, இந்திரிய அறிவு. இது போலவே கரணக்காட்சி, சீவக்காட்சி, ஆன்மக் காட்சியும் உண்டு.

  இதுபோல் அண்டத்தில் அகம், அக்கினி. அண்டத்தில் அகப்புறம் சூரியன். அண்டத்தில் புறம். சந்திரன். புறப்புறம், நட்சத்திரங்கள். ஆகவே பிண்டத்தில் நான்கு இடங்கள், அண்டத்தில் நான்கு இடங்கள் ஆக எட்டு இடங்களிலும்  கடவுட்பிரகாசம் காரியத்தாலுள்ளது. காரணத்தால் உள்ள இடம் பிண்டமதில் புருவமத்தி ஆகும். அண்டத்தில் இது பரமாகாசம் ஆகும். காரணகாரியமாயுள்ள இடம் நான்கு.

  பிண்டத்தில் விந்து நாதம். அண்டத்தில் மின்னல் இடி. சர்வயோனியிடத்தும் விந்து விளக்கமாகிய மின்னலிடத்தும் நாத விளக்கமாகிய இடியிடத்தும் இதல்லாத பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் சோதி என்றும் சோதியுள் சோதியாயும், மேற்குறித்த அகமாகிய ஆன்மப் பிரகாசமே ஞானசபை. அந்தப் பிரகாசத்துக்குள் இருக்கும் பிரகாசம் கடவுள்.

  அந்த உள்ளொளியின் அசைவு நடம். இதுதான் ஞானாகாச நடனம்  என்றும் அசைவுற்றதே நடராசரென்றும் ஆனந்தநடனம் என்றும் சொல்லப்படுகிறது. ஆதலால் நாம் தினம் ஆறுகாலத்திலும் மேற்குறித்த பிரகாசமே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் வணங்க வேண்டும். எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நம்முடைய கரணத்தைச் செலுத்தவேண்டும். பாரதியார் இந்த ஞானாகாசத்தைத் தன்னுடைய பாடலில் குறிப்பிடுகிறார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »