
பாஜவின் தேசிய செயல் தலைவராக பீஹார் மாநில அமைச்சர் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
45 வயதான பீஹார் மாநிலத்தின் இளம் தலைவரான நிதின் நபின் சின்ஹா, பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக அறிவிக்கப் பட்டுள்ளார். தமிழகம், கேரளம், மேற்குவங்க தேர்தல்களுக்குப் பிறகு தேசிய தலைவராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக.,வின் தேசியத் தலைவராக 2020 பிப்ரவரியில் ஜே.பி. நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள்தான். அப்போது அடுத்து வந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஜே.பி.நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தே.ஜ.கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
தொடர்ந்து கட்சிக்கான புதிய தேசியத் தலைவர் நியமனம் குறித்து பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்நிலையில் , பாஜக.,வின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் சின்ஹா தற்போது நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளிவந்துள்ளது. பீஹாரைச் சேர்ந்த இவர் பாஜக., மூத்த தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன். பங்கிப்பூர் சட்டசபைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றுள்ளார். நிதின் நபின் பாட்னாவில் பிறந்தவர்.
பிகாரின் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக உள்ள நிதின் நபின், வலுவான ஆர்.எஸ்.எஸ். பின்னணி உடையவர்.
பிகார் அரசியலில் பாஜகவின் கூர்மையான வியூக வகுப்பாளராகவும் அறியப்படுகிறார். பான்கிபூர் நகரத் தொகுதியில் 2010, 2015, 2020 மற்றும் 2025 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும் நிதின் நபின் பொறுப்பு வகித்துள்ளார்.
ஊடகங்கள் இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ஊகங்களாக சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில், நிதின் நபின் என்ற இந்தப் பட்டியலிலேயே இல்லாத ஒருவரை, எவரும் நினைத்திராத வகையில் செயல் தலைவராக அறிவித்திருக்கிறது பாஜக.,!




