
முந்தாநாள் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். அரசியல் சீன் போட்டுக் கொண்டிருந்தவர், சினிமா சீனிலேயே சிக்கிக் கொண்டார். தமிழகமே சினிமாவில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதால், நாமும் அதையே உதாரணமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. மக்களின் சினி மாமோகம் அப்படி.
அண்மைய திமுக., அரசின் நடவடிக்கைகள் எனக்கு அவர் நடித்த அருணாசலம் படத்தையே நினைவூட்டியது.
அருணாசலம் எனும் அருணையின் கிரியில் தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரம், அருணாசலத்தில் வெளிச்சம் மங்கி திருப்பரங்குன்றம் தீபத்தின் பிரகாசம் அன்பர்களின் உள்ளங்களில் ஏற்றுக் கொண்டிருந்தது. காரணம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கார்த்திகை தீப நாளின் மாலை 6 மணி நிகழ்வுகள்! அவை அந்த அருணாசலத்தையே நினைவூட்டின.
முப்பது கோடி ரூபாய் ஒரு மாதத்தில் செலவழிக்க வேண்டும். அதற்கு சில நிபந்தனைகள். சொந்தமாக சொத்து வாங்கி இருக்கக் கூடாது. கைவசம் எதுவும் மிஞ்சி இருக்கக் கூடாது. சவாலில் வென்றால் மூவாயிரம் கோடி ரூபாய் சொத்து கிடைக்கும். இந்த நாடகத்தனங்களை பெரும்பாலும் நாம் எல்லோருமே பார்த்து ரசித்திருப்போம். இந்தத் தலைமுறையும் கூட டிவி,க்களின் புண்ணியத்தில் பார்த்திருக்கக் கூடும். அந்த விறு விறு காட்சிகள், எதிரணி செய்யும் தகிடுதத்தங்கள், அரசியல் கட்சி தொடங்கி ரஜினி தரப்பு செய்யும் கோமாளித்தனங்கள், திருப்பங்கள் காட்டும் காட்சிகளின் போதான பின்னணி இசை எல்லாம்தான்…
அதுவும் அந்தக் கடைசி நிமிடக் காட்சி. 12 மணியை நெருங்கும் போது… நொடிக்கு நொடி … ரம்பா வந்து உண்மையைச் சொல்ல அப்போது கையில் மீதம் வந்த ஒரு லட்சத்து சொச்சம் பணத்தை இந்தா பிடி உன் சம்பளம் என்று கொடுத்து வவுச்சரில் கையெழுத்து வாங்கி சமர்ப்பித்து, அப்பாடா என்று ரஜினி மூச்சு விடும்போது பார்ப்பவர்களுக்கும் முகத்தில் நிம்மதி தெரியும் வகையில் ஒன்றிப் போய் விடுவார்கள்…
அதே அதே சினிமாத்தனத்தைத்தான் அன்றைய நாளிலும் காண நேர்ந்தது. 6 மணிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது. அதை ஏற்ற விடாமல் செய்வோம் என அரசு கங்கணம் கட்டிக் கொண்டது. சொத்துகளை ஆட்டையப் போடும் ரகுவரன் அணியின் சாகசம் போல், கோயில் சொத்துகளை ஆட்டையப் போடும் திமுக.,! அதற்கு எத்தனை அடியாட்கள்..!? பிரதானமானது கறுப்பு சிகப்புச் சீருடை போட்டுக் கொண்டிருக்க வேண்டியவர்கள் மக்களின் கண்களை மறைக்கும் வகையில் காக்கிச் சீருடையில் முன் நின்றார்கள். சட்டத்தைப் பராமரிப்பது நீதிமன்றம். சட்டத்தை இயற்றுவது சட்டமன்றம். இயற்றுபவனைக் காட்டிலும் பராமரிப்பவனுக்கே பொறுப்பு அதிகம். பராமரிப்பவனின் சொல்லைத்தான் அதன் பாதுகாவலர் கேட்டிருக்க வேண்டும். நிற்க…
நான் மஞ்சரியின் இதழாசிரியராக இருந்த போது, வெளிநாட்டு அறிஞர்களின் தத்துவங்கள் பொன்மொழிகளை ஃபில்லர் எனும் வகையில் பக்கங்களில் கட்டுரைகளின் மீதமிருக்கும் இடத்தில் போட்டு நிரப்புவேன். அப்படி ஒரு தத்துவம் – அது பெர்னாட்ஷா அல்லது யாரோ ஒருவர்… பெயர் நினைவில்லை.
குடியாட்சியில் பல முட்டாள்கள் (திருடர்கள்) சேர்ந்து ஒருவனைத் தேர்வு செய்கிறார்கள்..
முடியாட்சியில் அந்த முட்டாளே (திருடனே) அதிகாரத்தில் வந்து அமர்ந்து கொள்கிறான் – என்பதாக இருக்கும். இதில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொல்லுக்கான தகுதியில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்கள், எத்தகைய நாடகத்தனங்களைச் செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
6 மணிக்குள் விளக்கு ஏற்ற விடாமல் செய்கிறேன் பார் என்பதில் உறுதியாக இருந்ததால் தான், ஒரு அடியாள் துறைத் தலைவர், உனக்கு விளக்கு ஏத்த முடிஞ்சதா? விளக்கு ஏத்த வக்கில்ல வந்து பேசுறான் பாரு என்று கேட்டது…
கொடுத்த உத்தரவுக்குக் கட்டுப்படாமல் அதை நான் அப்பீல் செய்வேன், இதை நிறைவேற்ற முடியாது என்று, எவர் அந்த உத்தரவை செயல்படுத்த வேண்டுமோ அவரே அடங்கமறு அத்துமீறுத்தனமாய்ச் சொல்வது…
வேண்டுமென்றே இழுத்தடித்து, இந்த வருடமும் விளக்கு ஏற்றாமல் கடந்து போய் விட்டால், அதைக் காரணம் காட்டியே ’மதரீதியாக’ வாக்களிப்பவர்களிடம் உனக்கு சாதகமாக நடந்து கொண்டேன் பார்த்தாயா! நான் தான் உன் காவலன் – என்று காட்டி வாக்குகளைப் பெற முயற்சி செய்வது. அதைத்தான் ஒருவன் சூப்பர் முதல்வரே என்று சிலாகித்துப் பேசி அந்த வீடியோவையும் சமூகத் தளங்களில் பரப்பியிருப்பது.
திருமாவளவன் சொன்ன… மோடி வெறுப்பை கட்டமைத்திருக்கிறோம் என்பது போல், ஆன்மிக ஹிந்துக்கள், பாஜக.,வைக் காட்டியே முஸ்லிம்களிடம் வெறுப்பைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதைக் காரணம் காட்டியே வாக்கு அறுவடையை நிகழ்த்துகிறார்கள். ஆனால் அவர்கள் செயலால் ஒரு சமூகத்தின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளாகிறோமே என்ற எண்ணம் இன்னொரு தரப்பாருக்கு ஏற்படாமல் போகிறது. அது ஏற்பட்டிருந்தால், ஒற்றுமையாக இருப்போம், எங்களிடம் பிரிவினை எடுபடாது என்று இத்தகையவர்களை புறக்கணித்திருப்பார்கள்.
உச்ச நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தவறாக மனுத் தாக்கல் செய்து, அசிங்கப்பட்டாலும் சரி, கால நீட்டிப்பு பெற்று, காலத்தைக் கடத்தி காரியம் சாதிப்பது…
அடடே எத்தனை சினிமாத் தனங்கள். ஆனால் இந்த முறை வெற்றி பெற்றதென்னவோ அருணாச்சலம் – ரஜினி அல்ல, வில்லன் ரகுவரன் வகையறாக்கள் தான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துகளை அடையப்போவதும் அவர்கள்தான்! நாம் சினிமாவில் மட்டுமே ரஜினியின் புன்னகை முகத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்! சினிமா வேறு நிஜம் வேறு என்று சொல்லிக் கொள்வோம்; ஆனால் சினிமா சீன்கள் தான் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நம்ப மறுக்காமல்!
காரணம், அந்த இயக்கம் வளர்ந்ததே நாடகத்தை மூலதனமாய்க் கொண்டுதானே! பின் சினிமா, டிவி என்று வளர்ந்தது, இப்போது சமூக ஊடகங்களில் பரவலாகியிருக்கிறது! நம் சினிமாவை நிஜத்தில் இருந்து பிரித்து சினிமா மோக வலையில் இருந்து மீளாதவரையில், விஜய் வகையறாக்கள் இந்தக் காட்சிகளைத் தொடரவே செய்வார்கள்! அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் நேர்மைக்கும் மதிப்பளிக்காத சமுகம் சீரழிவதை, கண்முன்னே கண்டு நெஞ்சம் விம்மி பாரதியைப் போல் பாட்டுப் புலம்பல்களால் காயத்தின் ரணத்தை காற்றாட்டிக் கொள்ள வேண்டியதுதான்!
***
நேற்று மாலை சென்னை ஃப்ரன்ட்ஸ் ஃபோரத்தின் ஜூம் மீட்டிங் வாயிலாக ‘ஊடக அறம்’ குறித்துப் பேச ஒரு வாய்ப்பு அமைந்தது. தர்மம் தான் நம்மை இயக்குவது. அறம் – அறநெறி இன்றி நம்மை வழிநடத்த இவ்வுலகில் வேறேதுமில்லை என்பதால், அனுபவங்களின் ஊடாக, ஊடக நெறியை அடியேன் கற்றதும், இன்று காண்பதும் குறித்துப் பேசினேன்.
பல தகவல்கள். முத்தாய்ப்பாக அமைந்தது விவகாரம் ஆக்கப்பட்ட திருப்பரங்குன்றம் விவகாரம்! அப்போது பேசியதன் நீட்சியே மேலே இக்கருத்தை எழுதத் தூண்டியது. இதனை கார்த்திகையில் கார்த்திகை நாளன்றே எழுதியிருக்கலாம். ஆனால், நலமின்மை, மனமின்மை, நேரமின்மை, ஆர்வமின்மை என பல இன்மைகளால் இப்பக்கம் வராமல் தவிர்த்து இனிமைகளில் போக்கினேன். ஆக… ஆக… இன்மையே இனிமை!
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்




