
— ராம் மாதவ்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்
தில்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு நடந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள் , எண்ணற்றோர் காயமடைந்தனர். அது அதிர்வலைகளை எழுப்பியது. குறிப்பாக பரீதாபாத்தில் உள்ள அல் – பலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த காஷ்மீரை சேர்ந்த மருத்துவர் முசம்மில் அகமது கனே / கணாய் என்பவருடனும் அவரது கூட்டாளிகளுடனும் தொடர்புடைய இடங்களில் ஹரியானா , ஜம்மு – காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து நடத்திய தேர்தல் வேட்டை தாக்குதலின் ஆழத்தை காட்டியது. காவல்துறையினர் ஏராளமான வெடிபொருள்களை கைப்பற்றினர். அவை நாடு முழுக்கவும் தொடர் குண்டு தாக்குதலை நடத்த தேவையான அளவுக்கு இருந்தது.
தாக்குதலுக்கு பிறகு மத்திய அமைச்சரவையை கூட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சரவை அந்த தாக்குதலை, ‘இந்த கொடூரமான பயங்கரவாத செயலை தேச விரோத சக்திகள் செய்துள்ளன’ என்று கண்டனம் செய்தது. தேசிய புலனாய்வு முகமை (என் ஐ ஏ ) இந்த விசாரணையில் ஈடுபட்டது. இந்த தாக்குதலை, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஸ் இ மொஹமத் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ‘ஒயிட் காலர்’ குழுவினரால் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல், என்றது என் ஐ ஏ.
உடனே குற்றச்சாட்டுகளும் பதில் குற்றச்சாட்டுகளும் என்று விவாதம் தொடங்கியது. ஆனால், இப்போது ஒரு மாதம் கழிந்து விட்ட நிலையில், விவாதங்களில் சூடு ஆறிய நிலையில், அந்த தாக்குதலை பற்றி அலசி ஆராய வேண்டியுள்ளது. மும்பாயைச் சேர்ந்த ஒசாமா ராவல் என்பவர் மில்லி கிரானிக்கல் என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ள கட்டுரையை சுய பரிசோதனை செய்வதாக உள்ளது.
அதில் அவர் , அந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மாறாக வழக்கம் போல் ‘நம் பொதுவெளியில் பரவிக் கிடக்கும் அறிவு சார் நேர்மையற்று’ செயல்படக்கூடாது என்று சாடியுள்ளார். அதுமட்டுமின்றி, இப்போது நடக்கும் விவாதங்கள் ‘மையமாக உள்ள உண்மையை தவிர்ப்பதாக – அதாவது இதை செய்தவர் ஒரு கருத்தியலால் உந்தப்பட்டு தானே தன்னார்வத்துடன் இதை செய்ததாக கூறியுள்ளதை பலரும் எதிர்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று தன் கவலையை வெளிப்படுத்தி உள்ளார்.
இரண்டு முக்கிய பாடங்களை அந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று, கல்வியும் பொருளாதார மேம்பாடும் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்வு என்ற மாயை. தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி ஒரு மருத்துவர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவரும் மருத்துவர்கள். மற்றொருவர் ட்ரோன்களை பயன்படுத்தவும் அதை மாற்றி அமைக்கவும் தெரிந்த தொழில்நுட்ப வல்லுனர்.
உலகம் முழுவதும் பார்த்தால் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பலரும் மிகவும் படித்தவர். ஒசாமா பின் லேடன் ஒரு இன்ஜினியர். அவரது சகாவான ஐமன் அல் ஜவாஹிரி ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர். 9/11 (அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல்) தாக்குதலை தலைமை ஏற்று நடத்திய விமான கடத்தல்காரரான முஹம்மது அட்டா ஒரு என்ஜினியர். அவர் ஜெர்மனியில் படித்தவர்.
இந்திய பயங்கரவாதிகளில் ரியாஸ் பட்கல் ஒரு இன்ஜினியர். கோரக்நாதர் கோயிலை 2022 இல் தாக்கிய அகமது அப்பாசி ஐ.ஐ.டி இல் படித்தவர். எனவே முக்கியமான பாடம் என்னவென்றால், கட்டுரையில் ஒசாமா ராவத் கூறியுள்ளதை போல், ‘தீவிரவாதம் வறுமையால் வருவது அல்ல. அது நம்பிக்கை பெற்று வளர்த்த குழந்தை.’
அடுத்ததாக, இது போன்ற தீவிர நம்பிக்கைகள் மத கருத்தியலில் இருந்தே பிறக்கின்றன என்ற இரண்டாவது நெருடலான உண்மைக்கு இட்டுச் செல்கிறது. உமர் நபி பதிவு செய்துள்ள காணொளி ஒன்றில் , உலகம் ‘தற்கொலை தாக்குதல்’ என்று கருதுவது தவறு உண்மையில் அது ஒரு ‘தியாக செயல்’ . இதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய மரபில் உள்ளன. இதற்கு இஸ்லாமிய மதத்தில் அனுமதி உண்டு, என்று பதிவிட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாக மதத்தைச் சார்ந்த அனைவரையும் பயங்கரவாதிகள் என்று கூறுவது தவறு. ஆனால் நெருடலாக இருக்கிறது என்பதற்காக உண்மையை போர்வையிட்டு மறைக்க முடியாது. இந்த இடத்தில் தான் முஸ்லிம் அறிஞர்கள், படித்தவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ‘இஸ்லாத்துக்கு ஆபத்து’ என்ற ஏமாற்றுப் பிரச்சாரத்தின் மூலம் பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தும் போக்கிற்கு எதிராக முஸ்லிம் சமுதாயத்திற்குள் இருந்து குரல்கள் எழும்பி வருகின்றன. வெளிப்படையான கண்டனங்கள் வலுவாக மேலெழுந்து வருகின்றன.
அண்மையில் சிட்டிசன்ஸ் ஃபார் பெட்டர்னிட்டி என்ற அமைப்பைச் சார்ந்த நஜீப் ஜங் , எஸ் ஒய் குரேஷி, லெப் – ஜெனரல் ஜமீர் உதின் ஷா போன்ற பிரபலங்கள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ‘இந்த பயங்கரவாத தாக்குதல் நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஜும்மா மசூதியின் இமாமாகவும் அனைத்திந்திய மஜ்லீஸ் – இ – இத்தேஹாதுல் முஸ்லிமின் (ஏ ஐ எம் ஐ எம்) தலைவராகவும் இருக்கின்ற அசாதுதீன் ஓவைசி, ஜமாத் இ இஸ்லாமி மற்றும் ஜமாத் உலாமா இ ஹிந்த் அமைப்பின் தலைவர்களும் மற்றும் பலரும் உமர் நபியின் செயலை கண்டனம் செய்ததுடன் அவர் காணொளியில் பதிவிட்டுள்ள கருத்து இஸ்லாத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளனர்.
உலகளவில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்துக்களை சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம் வேர்ல்ட் லீக்கின் பொதுச்செயலாளராக இருக்கும் முகமது அல் இஷா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள நஹ்த்லதுல் உலமா (என் யூ) வின் தலைவராக உள்ள யஹ்யா சோலில் ஸ்டாக்ப் என்ற தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த இரண்டு தலைவர்களும் டில்லி வெடிகுண்டு தாக்குதலை கண்டனம் செய்துள்ளனர்.
அல் இஷா தில்லி தாக்குதலை ‘கொடூர செயல்’ என்றும் இது போன்ற பயங்கரவாத செயல்கள் அனைத்தையும் இஸ்லாம் உறுதியாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். என் யூ வின் தலைவர் இந்தியாவும் இந்தோனேசியாவும் நல்லுறவு கொண்டுள்ளதாகவும் ‘பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றுபட்டுள்ளதாகவும்’ சொல்லி உள்ளார்.
பயங்கரவாத செயல்களை பற்றி விவாதிக்கும் போது, ‘நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்’ என்பதற்கும் ‘நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா’ என்ற கூற்றுக்கும் இடம் தரலாகாது. மதக் கோட்பாடுகளை சீர்திருத்தம் செய்து மறு சீரமைப்பது பற்றி கவனம் செலுத்துவது தான் முதிர்ச்சியான அணுகுமுறை ஆகும்.
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
கட்டுரையாளர் இந்தியா பவுண்டேசனின் தலைவராக உள்ளார். பாஜக தேசிய தலைவர்களில் ஒருவர்




