December 11, 2025, 10:12 AM
25.3 C
Chennai

பாரதி திருவாசகம்

bharathiar - 2025

பத்மன்

“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு. திருவாசகம் என்றதுமே, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் சட்டென்று நினைவுக்கு வரும். அதேநேரத்தில், திருவாசகம் என்பது விரிவான பொருள் உடையது. திரு என்பதற்கு மரியாதை, வளம், இறைத்தன்மை உள்ளிட்ட பல பொருள்கள் உண்டு. அந்த வகையில் இவை எல்லாவற்றையும் தருகின்ற நல்ல வாசகங்களுக்கும் திருவாசகம் எனப் பெயர் உண்டு.

மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள் அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோல் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.

அதற்கோர் உதாரணம், “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை ஆங்கோர் காட்டிலே பொந்திடை வைத்தேன், வெந்து தணிந்தது காடு” என்ற வாக்கியம். அக்கினிக் குஞ்சு என்றால் சிறிய தீப் பிழம்பு. அந்தத் தீப் பொறியை, காட்டிலே சிறிய பொந்தில் வைத்தால் கூட, முழுக் காடும் எரிந்து சாம்பலாகிவிடும். இங்கே தத்துவார்த்தமாக, ஞானத்தை அக்கினிக் குஞ்சாக உருவகப்படுத்துகிறார் மகாகவி. ஞானத்தின் சிறிய தீப்பொறி போதும், அறியாமையாகிய வனம் எரிந்து தணிந்துவிடும். தணிந்தபின் புத்தறிவுப் பயிர்கள் முளைக்கும்.

மகாகவியின் “புதிய ஆத்திசூடி” முழுவதுமே ஒற்றை வரிகளில் அமைந்த திருவாசகங்கள்தாம். அதில் முதல் வரியே, “அச்சம் தவிர்” என்று கட்டளையிடுகிறது. எல்லோருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் அடிமனதில் அச்சம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதனைத் தவிர்க்க, புறக்கணிக்க, அதற்கு அகப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஆகையால் அச்சம் தவிர் என்றுள்ளார். இதையே பிறிதொரு கவிதையில், “உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே” என்று அறைகூவல் விட்டிருப்பார்.

புதிய ஆத்திசூடியின் அடுத்த பாடல் வரி, “ஆண்மை தவறேல்”. ஆண்மை என்பது தைரியம், நேர்மை, ஆளுமை, கடமை ஆகியவற்றைக் குறிக்கும் சொல். அவற்றில் ஒருபோதும் தவறிவிடக் கூடாது. புதிய ஆத்திசூடியில் உள்ள பிரபலமான வாசகம் – “ரௌத்திரம் பழகு”. ரௌத்திரம் என்றால் வெறும் கோபம் அல்ல, அறச்சீற்றம். அநியாயங்களைக் கண்டு பொங்கி எழுகின்ற வீரமும், செயலாக்கமும் நிறைந்த கோபம். அது சும்மா வந்துவிடாது என்பதால், அதனைப் பழகச் சொல்கிறார்.

மகாகவியின் ரௌத்திரத்துக்கு இரண்டு சிறந்த எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒன்று, பாஞ்சாலி சபதத்தில் பீமனின் கூற்றாக அமைந்துள்ள “இனி பொறுப்பதில்லை தம்பி! எரிதழல் கொண்டுவா” என்ற வாசகம். செல்வத்தையும், நாட்டையும், தம்பிகளையும், தன்னையுமே சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்ற பின்பு, மனைவி பாஞ்சாலியையும் பந்தயம் கட்டி, தருமன் தோற்றபோது, அந்த அதர்மத்தால் பீமன் வெகுண்டு, தனது தம்பி அர்ஜுனனிடம் இந்த வார்த்தையைச் சொல்கிறான். மகாகவியின் மற்றோர் அறச்சீற்றம் – “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்”. உலகில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிப்பதற்கான அறச்சீற்றம் இது.

நாட்டின் விடுதலைக்கு முன்பே “விடுதலை விடுதலை விடுதலை” என்று வீர முழக்கமிட்டவர் மகாகவி. “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு” என்று சுதந்திரத்தோடு அதன் பயனான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையும் சேர்த்தே மொழிந்தவர் பாரதி. “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற மகாகவியின் கவிதை வரிகள், இந்திய அரசியல் சாசனத்தின் அஸ்திவாரக் கற்களாகவே திகழ்கின்றன. ‘இன்க்ளூசிவ்னஸ்’ அதாவது ‘அனைவரையும் உள்ளடக்கிய தன்மை’ என்பதை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருக்க வேண்டும் என்பதை “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம் இனியுண்டோ?” என்ற கேள்வியின் மூலம் புரிந்துகொள்ள வைக்கிறார்.

பெண்ணடிமைத்தனம் மிகுந்திருந்த நூறாண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று பெண் விடுதலைக்காக சரியான திசையில் குரல் கொடுத்தவர் மகாகவி. “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று கல்வித் துறையில் மாத்திரமல்ல, சட்டம் இயற்றுகின்ற அரசியல் துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தவர் அவர். “வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்” என்ற அவரது திருவாசகம் நிதர்சனமாகிவிட்டது.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” கொண்ட புதுமைப் பெண்களை தனது கவிதையில் உலவவிட்டு, இன்றைய நிஜத்திலும் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அதேநேரத்தில் பகுத்தறிவு என்ற போர்வைக்குள் பெண் விடுதலை என்ற கருத்தைத் திரித்து, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் சமூகக்கேடுகளில் ஈடுபடும் போக்கை மகாகவி ஆதரித்தவர் இல்லை. அதனை, அஞ்சாத நெறிகளும் என்பதைத் தொடர்ந்து “திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” என்ற திடநம்பிக்கையின் மூலம் வெளிப்படுத்துகிறார். பொய்ப் பகுத்தறிவு இல்லாமல், ஞானச் செருக்கு இருக்கின்ற பெண்கள், செம்மையான நெறியில் இருந்து பிறழ்வதில்லை என்பதை ஓங்கி உரைக்கிறார். அத்துடன், “கற்புநிலை என்று சொல்ல வந்தார், இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்று, பெண்களைப் போலவே ஆண்களும் கற்பைப் பேண வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

புரட்சி என்ற வார்த்தையைத் தமிழிலே அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதிதான். ரஷ்யப் புரட்சியை “ஆகா! என்று எழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று பாராட்டியதன் மூலம் தமிழுக்குப் புரட்சி என்ற சொல் கிடைத்தது. வெளிநாடுகள் குறித்த விஷயங்களைத் தமிழருக்கு உடனுக்குடன் அறிவிக்கும் அதேநேரத்தில், அதிலே இந்தியப் பார்வையை பாரதி ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. அதற்கு, ஆகா என்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்ற வார்த்தைக்கு முன் உள்ள “மாகாளி கண்ணுற்றாள்” என்ற வார்த்தையே சான்று. பாரதப் பண்பாட்டின்படி அறச்சீற்றத்தின் அடையாளங்களில் ஒன்று மகா காளி என்ற தெய்வம்.

இந்த நாடு பிளவுண்டு போகும் என்பதை முன்பே கணித்ததைப் போல, “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் அதனை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்று வருங்காலத் தலைமுறைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். அதேநேரத்தில் பல்வேறு அரிய சாகசங்களை நாம் படைத்து உலகில் முன்னிலை பெறுவோம் என்பதை “எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” என்று முழங்கியுள்ளார். பாரதியின் தீர்க்க தரிசன வாசகங்களில் ஒன்று – “சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்”. இன்றைய நமது சந்திரயான் விண்வெளித் திட்டத்துக்கு உந்துதல் இதுவே.

“பாரதநாடு பழம்பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்று நம் நாட்டின் பழங்காலச் சிறப்பை நினைவுபடுத்தி, நமக்குக் கட்டளையிடுகிறார். அத்துடன் இதன் நிகழ்காலச் சிறப்பை நினைவுறுத்தும் வகையில், “பாரதநாடு பார்க்கெல்லாம் திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்” என்கிறார். மேலும் வருங்காலத்திலும் இந்தியா உலகின் குருவாய், வழிகாட்டியாய் விளங்கும் என்பதை, “எல்லோரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும், ஆம்! ஆம்! இந்தியா உலகிற்கு அளிக்கும்!” என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

இவ்விதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தேசபக்தி, மனிதநேயம் ஆகியவற்றை அறிவுறுத்தியுள்ள மகாகவி பாரதியார், ஆன்மநேயத்தையும் போதித்துள்ளார். தெய்வம் ஒவ்வொருவருக்குள்ளும் உறைகிறது என்பதை “தெய்வம் நீயென்று உணர்” என்று அறிவித்துள்ளார். அத்துடன் அனைவருமே, அனைத்துமே ஆண்டவன்தான் என்பதை “நோக்கும் இடமெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்” என்று ஆனந்தத் தாண்டவம் புரிந்துள்ளார்.

மனிதன் லட்சிய மனிதனாக, நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்கு பாரதி கூறியுள்ள வாசகத்தைப் பார்ப்போம் – “எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்”. நாம் நினைத்தவை எல்லாம் நிறைவேற வேண்டும், எல்லாமே நிறைவேற வேண்டும் என்றாலும் அதிலே தீயவை இருந்துவிடக் கூடாது என்பதால், நல்லவற்றையே நாம் நினைக்க வேண்டும். அவ்வாறு நல்லதை நினைப்பதற்கு உறுதியான நெஞ்சம் நமக்கு வேண்டும். அத்தகைய உறுதியான நெஞ்சம் கிடைக்க, நன்கு ஆராய்ந்து தெளிந்த நல்லறிவு இருக்க வேண்டும் என்கிறார்.

இவ்வாறாக, மகாகவி பாரதியின் திருவாசகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆயினும் கட்டுரையின் அளவு கருதி, சிலவற்றை மட்டுமே இங்கே எடுத்துரைத்துள்ளேன். இறுதியாக, மகாகவியின் ஒரேயொரு திருவாசகத்தைக் கூறி நிறைவு செய்கிறேன். “இன்று புதிதாய் பிறந்தோம்”.

பாரதி புகழ் ஓங்குக!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

Topics

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு 2025ன் 100 சாதனையாளர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!

பஞ்சாங்கம் – டிச.10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

போலி தங்கக் காசுகளை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி மோசடி; 4 பேர் கைது!

ராஜபாளையத்தில் தங்க காசுகளை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட நான்கு முதியவர்கள் கைது!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் ஆ.ராசா பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம்!

வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தும் திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேச்சுக்கு இந்து...

Entertainment News

Popular Categories