
இராஜபாளையம் ராஜுக்களின் ‘கொத்தலு’
- ஸ்ரீமதி ப்ரஸன்னா
டிச. 14 ஞாயிறு அன்று, இராஜபாளையத்தில் எங்கள் பகுதியில் ‘கொத்தலு’ சிறப்பாக நடைபெற்றது. நகர் பெண்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்று சாமைக்கதிரை வைத்து வழிபட்டு, பிரஸாதம் ஸ்வீகரித்து வந்தது அழகான அனுபவம். தானியங்கள் தந்த பூமிக்கும், தானியங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நிகழ்வு ஆத்மார்த்தமாகவும், அன்பை பலப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது கூடுதல் சிறப்பு.
அதென்ன கொத்தலு என்பவர்களுக்காக, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பாலு சரவண கார்த்திக் எழுதிய பதிவு…
கொத்தலு
நேற்று (14/012/2025) இராஜபாளையம் ராஜூக்கள் சமுதாயத்தில் நடந்த அற்புதமான ஒரு நிகழ்வு. அவர்களின் சமுதாய பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு இன்று வரை நடந்து வருவது ஹிந்து சமுதாயம் எவ்வளவு பலம் என உணர வைத்துள்ளது.
ஒவ்வொரு சாதி தலைவர்களும் இது போல பின்பற்ற வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகின்றது, அதுவும் இந்த காலகட்டத்தில் மிக அவசியம் கூட!
கொத்தலு என்கின்ற பெயரில் ஒவ்வொரு மூன்று வருடமோ அல்லது ஐந்து வருடமோ ஒருமுறை அவர்கள் இல்லங்களில் புதிய நெற்கதிர்கள் நிறைந்த செடிகளை வீட்டிலே வைத்து கடவுள்களை அலங்காரம் செய்து தீபம் ஏற்றி ஏதாவது ஒரு இனிப்பு வைக்கின்றனர். இந்த நெற்கதிர்கள் அடங்கிய கட்டை அவர்களின் கோட்டை (சாவடி) யே வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும் எவர் இல்லத்திற்கும் செல்லலாம், ஆனால் கையில் இன்னொரு நெற் கதிர்கள் நிறைந்த கட்டோடு செல்ல வேண்டும், அந்த கட்டை எந்த இல்லத்திற்கு செய்கிறோமோ அங்கே வைத்து விட்டு அங்கிருக்கும் கட்டில் சில நெற்கதிர்களை எடுக்க வேண்டும்
சரி இல்லம் தேடி வருகின்றர்களை வெறும் கையோடு அனுப்பி விட முடியுமா, அது நமது பண்பு இல்லையே, அதனால் அவர்கள் சக்திக்கு ஏற்றார் போல் பலகாரங்களோ அல்லது பாயசமோ செய்து வைக்கின்றார்கள், யாரும் யாரையும் கேட்க தேவையில்லை, அருகிலே இருக்கும் டம்ளர் இருக்கும் நாமே ஊற்றி அருந்தி விட்டு செல்லலாம்.
கையில் கொண்டு வந்த நெற் கதிர்களை ஏற்றப்பட்ட தீபத்தின் கீழ் வைத்து விட்டு அவர்கள் இல்லத்திலிருக்கும் நெற்கதிர்களை எடுத்து அடுத்த இல்லத்திற்கு சென்று கையில் கொண்டு வந்த நெற் கதிர்களை அங்கு வைத்து சாமி கும்பிட்டு மீண்டும் அந்த வீட்டின் நெற்கதிர்களை எடுத்து அடுத்த வீட்டிற்கு செல்கிறார்கள்.
இப்படி ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் பத்து இல்லங்களுக்காவது செல்கிறார்கள், இந்த சடங்கை இன்று வரை பின்பற்றுவது தான் சிறப்பே, ஒரே சமுதாயத்திற்குள் எதிரிகளாக யாரும் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாட்டை அவர்களின் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர் என்றே நினைக்கிறேன்.
இது மிகப்பெரிய செயின் லிங்க் (Chain Link) இது சாமி கும்பிட மட்டும் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவில்லை, தங்களின் சமுதாயத்திற்குள் எவருக்கும் மனக்கசப்பு கூடாது என்றும், ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டினை அவர்களின் முன்னோர்கள் செய்துள்ளனர். நேற்று சத்தமே இல்லாமல் நடந்த மிகப்பெரிய நிகழ்வு இந்த கொத்தலு நிகழ்வு, ஒவ்வொரு சமுதாயமும் பின்பற்ற வேண்டியது, ஆனால் வேறு வேறு விஷயங்களை மையப்படுத்தி தங்கள் சமுதாயத்தை பலப்படுத்தலாம் அதிலுள்ள பெரியோர்கள்.
ஏனென்றால் சாதி ஒற்றுமையே ஹிந்து தர்மத்தின் பலம் என்பதை நாம் உணர வேண்டும். கொத்தலு நிகழ்வு போல நாம் சார்ந்த சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த வேறு வேறு நிகழ்வு மூலமாக பலப்படுத்தலாம். இப்படி நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்திலே இது போல சமுதாய ஒற்றுமைக்காக ஏதாவது நிகழ்வு நடத்துகிறோமா என்பதையும் சொல்லலாம்!
வாழ்க கொத்தலு பூஜை
“கொத்தலு” பற்றி இராஜுக்களின் குலவிளக்கு, பிதாமகர், அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களால் 1955-ல் எழுதப்பட்ட “இளமை நினைவுகள்” என்ற தனது சுயசரித்திர நூலில் குறிப்பிடுவதாவது…
“கொத்தலு” – எங்கள் புதுமை
“நாங்கள் உற்சாகத்துடன் கழிக்கும் நாள் வேறொன்றும் உண்டு. அது ஆண்டுக்கு ஒரு முறை “கொத்தலு” என்ற புதுமைக் கொண்டாட்டம் ஆகும். ஊரில் உள்ள சிறுவர் முதல் பெரியவர் வரை, குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள்.
அது எப்படியென்றால், நல்ல நாள் பார்த்து, அன்றைய தினம் சாமைக் கதிர்களை அறுவடை செய்து, வீட்டுக்குக் கொண்டு வருவார்கள் விவசாயிகள். யாராவது ஒருவருக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் விளைந்த சாமைப் பயிரை ‘ஊர்ப் பொது விலைக்கு’ வாங்குவார்கள். அடுத்த நல்ல தினத்தில், ஓர் இடத்தில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்.
அவரவர் பங்கை, அவரவர் தலைமேல் தாங்கி வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அங்கே தயாராக வைக்கப்பட்டிருக்கும் பொங்கல் பானைகளில், அப்போது கொண்டு வந்த சாமைக் கதிர்களை தானியத்தைத் தெளித்து, கடவுளை கும்பிட்டு, பொங்கி வைத்த சாதத்தைச் சாப்பிட்டு இன்புறுவர்.
இதில் விஷேசமென்னவென்றால், புதிதாய் விளைந்த கதிர்களைத் தலை மீது தாங்கிக்கொண்டு வருவதுதான். விவசாயத்தை மேற்கொண்டவர்களுக்கும், மற்றவர்களுக்கும் தானியம் புனிதமல்லவா! தானிய லட்சுமியல்லவா!
இத்தகைய தானியத்தை, அதிலும், வருஷ பலன்களில் முதன் முதலாக விளைந்து வரும் உணவு தானியத்தை, அவ்வளவு விஷேசத்துடனும், குதூகலத்துடனும் தலைமேற்கொள்வது, பொருள் பொதிந்த ‘புதுமை’ விழாக்கொண்டாட்டம்தானே!”




